ஓபனிங் இறங்க ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க.. சொதப்புனா திரும்ப கேட்கமாட்டேன்!ஒரே இன்னிங்ஸில் மாறிய சச்சினின் கெரியர்

By karthikeyan VFirst Published Apr 4, 2020, 4:23 PM IST
Highlights

கிரிக்கெட்டின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர், தான் முதன் முறையாக தொடக்க வீரராக இறங்க பெற்ற வாய்ப்பையும் அந்த வாய்ப்பை தான் பெற்ற முறை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேனும் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர், பேட்டிங்கில் பெரும்பாலான சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களுடன் 34,357 ரன்களை குவித்து, தனி சாம்ராஜ்ஜியமே நடத்தியவர் சச்சின் டெண்டுல்கர். தன்னிகரில்லா தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் தனது கெரியரின் தொடக்கத்தில் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கியதும், அதன்பின்னர் தொடக்க வீரராக இறங்கி சாதனைகளை புரிந்ததும் அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் அவர் தொடக்க வீரராக இறங்க பெற்ற வாய்ப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், தான் தொடக்க வீரராக இறங்க பெற்ற வாய்ப்பு குறித்து சச்சின் மனம் திறந்துள்ளார்.

அதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், 1994 நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில், ஆக்லாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆட ஹோட்டலில் இருந்து காலை கிளம்பும்போது, நான் தான் அன்றைக்கு தொடக்க வீரராக இறங்கப்போகிறேன் என்பது எனக்கு தெரியாது. மைதானத்திற்கு சென்றதும், கேப்டன் அசாருதீனும் அஜித் வடேகர் சாரும் டிரெஸ்ஸிங் ரூமில் தொடக்க வீரர் சித்து உடற்தகுதியுடன் இல்லை என்று பேசிக்கொண்டிருந்தனர். சித்து உடற்தகுதியுடன் இல்லாததால் யாரை தொடக்க வீரராக இறக்குவது என்று யோசித்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களிடம் நான் தொடக்க வீரராக இறங்குகிறேன். எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள்; கண்டிப்பாக நன்றாக ஆடுவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது என்று சொன்னேன்.

அதற்கு முன்பெல்லாம் தொடக்க ஓவர்களில் நிதானமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டு பின்னர்தான் அடித்து ஆடுவார்கள். ஆனால் 1992 உலக கோப்பையில் மார்க் க்ரேட்பேட்ச் மட்டுமே அதை மாற்றியமைத்து தொடக்கம் முதல் அடித்து ஆடியவர். எனவே நான் முதல் முறையாக தொடக்க வீரராக இறங்கியபோது, தொடக்கம் முதலே அடித்து ஆட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். தொடக்கம் முதலே அடித்து ஆடி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க நினைத்தேன். அதேபோலத்தான் ஆடினேன். 

நான் இந்த முறை சரியாக ஆடாமல் சொதப்பிவிட்டால், இனிமேல் கேட்கவே மாட்டேன் என்று சொல்லித்தான் தொடக்க வீரராக இறங்கினேன். அந்த போட்டியில் தொடக்கம் முதலே அடித்து ஆடி 49  பந்தில் 82 ரன்கள் அடித்தேன் என்றார்.

சச்சின் டெண்டுல்கர், கெஞ்சி கூத்தாடி தொடக்க வீரராக இறங்க பெற்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதிரடியாக ஆடி 49 பந்தில் 82 ரன்களை குவித்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக தொடக்க வீரராக இறங்கிய சச்சின் டெண்டுல்கர், குவித்த ரன்களும் படைத்த சாதனைகளும் வரலாறு. 
 

click me!