
தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடித்தவர் ரிஷப் பண்ட். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், தோனியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரிஷப் பண்ட், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்திய அணியில் தனக்கான இடத்தையும், ரசிகர்களின் அபிப்ராயத்தையும் பெற்றார்.
ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவருகிறார். ஐபிஎல்லில் சரியாக ஆடாத ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், கேப்டன்சியிலும் சுமாராகவே செயல்படுகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தமாகவே வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், 4வது டி20 போட்டியில் 23 பந்தில் வெறும் 17 ரன் மட்டுமே அடித்தார். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய அங்கமான ரிஷப் பண்ட்டின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஆகிய வீரர்களும் உள்ள நிலையில், ரிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டம் இந்திய அணியில் அவரது இடம் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதைத்தான் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபரும் கூறியிருக்கிறார். ரிஷப் பண்ட் குறித்து பேசிய வாசிம் ஜாஃபர், கேஎல் ராகுல் ஒரு விக்கெட் கீப்பர். அவர் அணிக்கு திரும்பிவிடுவார். இப்போது செம ஃபார்மில் நன்றாக ஆடிவரும் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர் தான். ரிஷப் பண்ட் மோசமாக ஆடிவருவதால் அவரது இடம் அபாயத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக ஸ்கோர் செய்தே ஆகவேண்டும். ஐபிஎல்லிலும் சரியாக ஆடவில்லை. சர்வதேச டி20 போட்டிகளிலும் சொதப்பிவருகிறார். எனவே இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.