எனக்கு கவாஸ்கர் சொன்ன அறிவுரையை நான் ரோஹித்துக்கு சொல்றேன்.. முன்னாள் வீரரின் உருப்படியான அட்வைஸ்

By karthikeyan VFirst Published Oct 10, 2019, 1:00 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, அபாரமாக ஆடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்தினார். 
 

தனக்கு இருந்த நெருக்கடியை பற்றி தலைக்கு ஏற்றாமல் நிதானமாக தொடங்கி, களத்தில் நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியில் எந்த தருணத்திலும் தடுமாறாத ரோஹித் சர்மா, தனது இயல்பான ஆட்டத்தை தெளிவாக ஆடினார். 

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 176 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களையும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

முதல் போட்டியில் அபாரமாக ஆடியதை அடுத்து, சேவாக்கைவிட சிறந்த டெக்னிக்கை கொண்ட அபாயகரமான வீரர் ரோஹித் என பல முன்னாள் வீரர்கள் புகழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், புனேவில் இன்று தொடங்கி நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரோஹித் சரியாக ஆடவில்லை. 10வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். ரபாடாவின் பந்தில் 14 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 

ரோஹித் நிலைத்து நின்றுவிட்டால், பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரும் தனது பேட்டிங்கின் தாரக மந்திரமே, முதலில் கவனமாக ஆடிவிட்டு பின்னர் ஆக்ரோஷமாக ஆடுவதுதான் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தனக்கு சொன்ன அறிவுரையை, டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர், ரோஹித் சர்மாவுக்கு கூறியுள்ளார்.

”எனது கெரியரின் ஆரம்பத்தில் கவாஸ்கர் எனக்கு சொன்ன அறிவுரையை நான் ரோஹித்துக்கு சொல்ல விரும்புகிறேன். இன்னிங்ஸின் முதல் ஒருமணி நேரத்தை முழுவதுமாக பவுலருக்கு கொடுத்துவிட வேண்டும். எந்தவிதமான கண்டிஷனாக இருந்தாலும் சரி.. முதல் ஒரு மணி நேரத்தில் நமது ஈகோவிற்கு இடம் கொடுக்காமல், பவுலருக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்படி முதல் ஒருமணி நேரத்தை கடத்திவிட்டால், அதன்பின்னர் அடுத்த 5 மணி நேரங்கள் பேட்ஸ்மேனுடையதுதான் என்று கவாஸ்கர் என்னிடம் சொன்னார். இதையே நான் ரோஹித்துக்கு சொல்கிறேன்” என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 

click me!