கேப்டன்சியில் சொதப்பிய அசார் அலி.. தவறுகளை லிஸ்ட் போட்டு தெறிக்கவிட்ட வாசிம் அக்ரம்..!

By karthikeyan VFirst Published Aug 10, 2020, 2:30 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதற்கு, கேப்டன் அசார் அலியின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடிக்க, அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 219 ரன்களுக்கு சுருண்டது. 107 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, வெறும் 169 ரன்களுக்கு சுருண்டது. 

277 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முதல் 5 விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் ஆரம்பத்திலேயே வீழ்த்திய பாகிஸ்தான் அணி, அதன்பின்னர் ஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரையும் களத்தில் நிலைக்கவிட்டது. பட்லரும் வோக்ஸும் அருமையாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து ஆறாவது விக்கெட்டுக்கு 139 ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். 

பட்லர் - வோக்ஸ் ஜோடியை நிலைக்கவிடாமல் பிரித்திருந்தால், பாகிஸ்தான் வென்றிருக்கும். அதை செய்யாததற்கு, பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் உத்தி ரீதியான குறைபாடும் சில தருணங்களை தவறவிட்டதும் தான் காரணம் என்றும் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணிக்கும் ரசிகர்களுக்கும் இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்திருக்கும். வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். ஆனால் பாகிஸ்தான் கேப்டன், சில உத்திகளை செய்ய தவறிவிட்டார். ஒரு கேப்டனாக சில இடங்களில் கோட்டைவிட்டார். கிறிஸ் வோக்ஸ் களத்திற்கு வந்ததும், அவருக்கு பவுன்ஸர், ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி டஃப் கொடுக்காமல், அவரை களத்தில் நிலைக்க விட்டுவிட்டனர். பட்லரும் வோக்ஸும் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது, பவுலிங்கில் டர்ன் இல்லை, ஸ்விங் இல்லை எதுவுமே இல்லை. அவர்கள் இருவரும் வெற்றியை பறித்துவிட்டார்கள். 

பாகிஸ்தான் அணியின் சிறப்பே, எதிர்பார்க்காத ஆச்சரியங்களை நிகழ்த்தும் அட்டாக்கிங் கிரிக்கெட் தான். நாள் முழுக்க சரியான லைன் அண்ட் லெந்த்தில் வீசிக்கொண்டிருக்க நாம் ஒன்றும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடும் பவுலர்கள் இல்லை. நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடியை அதிகமாக வீசவைக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். 

click me!