#INDvsENG துரதிர்ஷ்டவசமாக அவுட்டான புஜாரா; சதத்தை தவறவிட்ட பண்ட்..! இந்திய அணியை காக்க போராடும் தமிழர்கள்

By karthikeyan VFirst Published Feb 7, 2021, 6:25 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 257  ரன்கள் அடித்துள்ளது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கிவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம்(218), சிப்ளி(87), ஸ்டோக்ஸின்(82) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இங்கிலாந்து அணி கடைசி 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 29 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ரஹானேவும் வெறும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 73 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த புஜாராவும் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 119 ரன்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் அடித்த நிலையில் புஜாரா 73 ரன்னில் ஆட்டமிழந்தார். டோமினிக் பெஸ்ஸின் பந்தை புஜாரா புல் ஷாட் ஆட, அது ஷார்ட் லெக்கில் நின்ற ஃபீல்டர் மீது பட்டு எகிற அதை ரோரி பர்ன்ஸ் பிடித்தார். துரதிர்ஷ்டவசமான முறையில் புஜாரா ஆட்டமிழந்து வெளியேற, அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் பெஸ்ஸின் சுழலில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். 

225 ரன்களுக்கு ஆறு விக்கெட் விழுந்துவிட, அதன்பின்னர் தமிழர்களான வாஷிங்டன் சுந்தரும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். இருவரும் இணைந்து 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி 17 ஓவர்களை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 3ம் நாள் ஆட்டத்தை இருவரும் இணைந்து முடித்தனர். இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்துள்ளது.
 

click me!