இரட்டை சதமடித்த வார்னர்.. தவறவிட்ட லபுஷேன்.. மெகா ஸ்கோரை நோக்கி ஆஸ்திரேலியா.. மிரண்டு நிற்கும் பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 30, 2019, 10:59 AM IST
Highlights

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதமடித்த டேவிட் வார்னர், முச்சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். 
 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்து 302 ரன்களை குவித்திருந்தது. ஜோ பர்ன்ஸ் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 4வது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் வார்னரும் லபுஷேனும் சேர்ந்து அபாரமாக ஆடினர். 

முதல் நாள் ஆட்டத்தின் மூன்று செசனையும் அவர்கள் ஆடினர். இரண்டாவது செசன் மட்டும் கொஞ்ச நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. மற்றபடி மூன்று செசனையும் ஆடிய வார்னர் மற்றும் லபுஷேன் ஆகிய இருவருமே சதமடித்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் வார்னர் 166 ரன்களுடனும் லபுஷேன் 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரட்டை சதத்தை விளாசினார் வார்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை விளாசிய வார்னர், அதன்பின்னரும் தொடர்ந்து அபாரமாக ஆடிவருகிறார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய லபுஷேன், 150 ரன்களை கடந்தார். ஆனால் கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் இரட்டை சதத்தை தவறவிட்டு 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் வார்னருடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இரட்டை சதத்திற்கு பின்னர் மேலும் சிறப்பாக ஆடிய வார்னர், 250 ரன்களை கடந்து களத்தில் உள்ளார். முச்சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார் வார்னர். அவருடன் இணைந்து ஸ்மித் சிறப்பாக ஆடிவருகிறார். வெறும் 2விக்கெட் இழப்பிற்கு 500 ரன்களை நெருங்கிவிட்டது ஆஸ்திரேலிய அணி. கண்டிப்பாக 650-700 ரன்களை அடித்துவிட்டுத்தான் பாகிஸ்தானை பேட்டிங் ஆட பணிக்கும் ஆஸ்திரேலிய அணி. எனவே இந்த போட்டியில் பாகிஸ்தான் சுதாரிப்பாக பேட்டிங் ஆடவில்லையெனில் மற்றுமொரு இன்னிங்ஸ் படுதோல்வி உறுதி.
 

click me!