பேட்டிங்கிற்கு எந்த ஒரு திறமை ரொம்ப முக்கியமோ அதை புடிச்சுட்டார்.. இனி அவர் வேற லெவல் தான்! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 9, 2021, 4:18 PM IST
Highlights

கேஎல் ராகுலின் ஷாட் தேர்வு நன்கு மேம்பட்டிருக்கிறது என்று வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித்துடன் மயன்க் அகர்வால் தான் தொடக்க வீரராக இறங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அவர் ஆடமுடியாமல் போனதையடுத்து, மிடில் ஆர்டரில் இறங்குவதாக இருந்த ராகுல் தொடக்க வீரராக ஆடினார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட ராகுல், சிறப்பாக ஆடி முதல் இன்னிங்ஸில் 84 ரன்களை குவித்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்த நிலையில், மறுமுனையில் நிலைத்து ஆடினார் ராகுல். சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் அனுபவ ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன், பிராட் ஆகியோரை திறம்பட எதிர்கொண்டு ஆடிய ராகுலின் இன்னிங்ஸ் தான், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற காரணமாக இருந்தது.

கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடைசி டெஸ்ட்டில் சதமடித்த ராகுல்(149), அங்கு விட்ட இடத்திலிருந்து முதல் டெஸ்ட்டில் பேட்டிங்கை தொடர்ந்ததை போல அருமையாக ஆடினார்.

கேஎல் ராகுல் தனக்கு மீண்டும் ஓபனிங்கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தனக்கான இடத்தை தக்கவைத்த நிலையில், கேஎல் ராகுலின் ஷாட் செலக்‌ஷனை புகழ்ந்து பேசியுள்ளார் வீரேந்திர சேவாக்.

ராகுல் குறித்து பேசிய சேவாக், 2 விதமான மனநிலைகள் உள்ளன. ஒன்று, ராகுல் டிராவிட் ஸ்டைலில் கம்பேக் கொடுக்க வேண்டும். பெரிய ஷாட்டே அடிக்காமல், முழுக்க முழுக்க தடுப்பாட்டம் ஆட வேண்டும். அல்லது சேவாக் ஸ்டைலில் ஆக்ரோஷமாக அடித்து ஆட வேண்டும். இரண்டுமே மிகக்கடினமானதுதான். இரண்டில் எது தங்களுக்கு பொருத்தமான ஸ்டைலோ அதை வீரர்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

ராகுல் அவரது ஷாட் செலக்‌ஷனில் மேம்பட்டிருக்கிறார். ஷாட் செலக்‌ஷன் நன்றாக இருந்தாலே, நன்றாக பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோர் அடிக்கமுடியும். விராட் கோலி அந்த விஷயத்தில் மிகத்திறமையானவர். அவரால் எந்தெந்த ஷாட்டுகளை ஆடமுடியும், எந்தெந்த ஷாட்டுகளை ஆடமுடியாது என்பதை நன்கு அறிந்தவர் கோலி. சதமே அடித்தாலும், அதன்பின்னரும் அதேமாதிரியே ஆடக்கூடியவர் கோலி என்று சேவாக் தெரிவித்தார்.

click me!