என்னை பயமுறுத்திய ஒரே பவுலர் அவர் தான்! இன்றைக்கு கூட அவரை எதிர்கொள்ளணும்னா நைட் தூக்கம் வராது - சேவாக்

By karthikeyan VFirst Published Sep 2, 2021, 7:21 PM IST
Highlights

தனது கிரிக்கெட் கெரியரில் தன்னை அச்சுறுத்திய பவுலர் முத்தையா முரளிதரன் தான் என்றும், இன்றைக்கு கூட அவரது பவுலிங்கை எதிர்கொள்ள வேண்டும் என்றாலும் இரவு தூக்கம் வராது என்றும் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், ஆல்டைம் சிறந்த அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவராக தனது பெயரை நிலைநிறுத்தி கொண்டவர். 

ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என்ற பாரபட்சமெல்லாம் பார்க்காமல் பந்தை பார்த்து அடித்து நொறுக்குபவர் சேவாக். கண்டிஷன், ஆடுகளத்தின் தன்மை, பவுலர் ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டுதான் பேட்ஸ்மேன்கள் பொதுவாக பேட்டிங் ஆடுவார்கள். ஆனால் சேவாக்கோ, இவற்றில் எதையுமே பொருட்படுத்தமாட்டார்; அவரது டெக்னிக் எல்லாமே, பந்தை பார்த்து அடிப்பது அவ்வளவுதான்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் என சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து எதிரணிகளையும், எதிரணிகளின் பவுலர்களையும் தெறிக்கவிட்டவர். கிட்டத்தட்ட அனைத்து பேட்ஸ்மேன்களுமே தடுப்பாட்ட உத்தியை கையாளும் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் பந்திலிருந்தே அடித்து ஆடிய வீரர் சேவாக். இரட்டை சதம், முச்சதம் ஆகியவற்றை சிக்ஸர் அடித்து எட்டக்கூடிய தில்லுக்கு சொந்தக்காரர்.

சேவாக் அவரது கெரியரில் க்ளென் மெக்ராத், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், ஷோயப் அக்தர், டேல் ஸ்டெய்ன் உள்ளிட்ட பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர். மிரட்டலான பவுலர்களை எல்லாம் தனது அதிரடியால் மிரட்டிய சேவாக், தன்னை அச்சுறுத்திய பவுலர் யார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் அபாயகரமான பவுலர் முத்தையா முரளிதரன் தான்.  முரளிதரனை எனது சர்வதேச கிரிக்கெட் கெரியரில் 7-8 ஆண்டுகள் எதிர்கொண்டேன். எப்போதெல்லாம் இலங்கைக்கு எதிராக ஆடுகிறோமோ, அப்போதெல்லாம் முரளிதரனை நினைத்து பயப்படுவேன்.       

இன்றைக்கு கூட முரளிதரனை எதிர்கொண்டு ஆடவேண்டுமென்றால், இரவு தூக்கம் வராது. அவரது ஆக்‌ஷனில், எது ஆஃப் ஸ்பின், எது தூஸ்ரா என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசுவது கூட தனக்கு எளிது என்றும், ஆனால் சேவாக்கிற்கு பந்துவீசத்தான் தான் பயந்ததாக முரளிதரன் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!