சீனியர் பிளேயர்ஸ்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!2022 டி20 உலக கோப்பைக்கு இந்த 5 இளம் வீரர்களை ரெடி பண்ணுங்க-சேவாக்

By karthikeyan VFirst Published Nov 6, 2021, 6:31 PM IST
Highlights

2022 டி20 உலக கோப்பைக்கு இளம் வீரர்களை தயார்படுத்தும் விதமாக, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஓய்வெடுத்துக்கொண்டு இளம் வீரர்களுக்கு ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி, கடைசி போட்டியில் நமீபியாவுக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுவிடும். ஆனால் ஏற்கனவே 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, அதன் கடைசி போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடம் தோற்றால் தான் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியுமே தவிர, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

இந்த டி20 உலக கோப்பை ஒருவேளை இந்திய அணிக்கு ஏமாற்றமாக அமைந்தாலும், டி20 உலக கோப்பையை அடுத்த ஆண்டே வெல்வதற்கான வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய, கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடக்கிறது.

இந்த ஆண்டு(2021) இந்தியாவில் நடப்பதாக திட்டமிடப்பட்ட டி20 உலக கோப்பை தொடர், இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. 2020ல் நடக்க வேண்டிய உலக கோப்பை தொடர் 2022ல் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

அந்த டி20 உலக கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார்படுத்த வேண்டும் என்று வீரேந்திர சேவாக் அறிவுறுத்தியுள்ளார். 

ஒரேநேரத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடுமளவிற்கு இந்திய அணியில் திறமையான வீரர்கள் நிரம்பி வழிகின்றனர். இந்த டி20 உலக கோப்பையில் கூட அணியில் எடுக்கப்பட்ட ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

2017லிருந்து இந்திய அணிக்காக ஆடி பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்த ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கு 15 வீரர்களை கொண்ட அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. தீபக் சாஹர், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களே ஸ்டாண்ட் பை வீரர்களாகத்தான் உள்ளனர். இன்னும் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட பல இளம் திறமையான வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், 2022ல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்தும் விதமாக, இந்தியாவில் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான  டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - உங்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரலாமா கோலி..? ஸ்காட்லாந்து வீரர்களின் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி..!

இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களுடன் அடுத்த உலக கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஆடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த வீரர்களை அடுத்த உலக கோப்பைக்கு தயார்படுத்த வேண்டும். இவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம். எனவே இவர்களுக்கு போதுமான வாய்ப்பளிக்க வேண்டும். சீனியர் வீரர்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களை ஆடவைக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்கள் கொஞ்சம் அனுபவத்தை பெற ஏதுவாக அவர்களை ஆடவைக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

click me!