
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடப்பதால், பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. ஸ்பின்னர் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 2வது ஓவரிலேயே வெறும் 4 ரன்னுக்கு ரன் அவுட்டாகி அவரது விக்கெட்டை அவரே தாரைவார்த்தார். ரோஹித் சர்மாவும் 15 ரன்னில் எம்பல்டேனியாவின் சுழலில் ஆட்டமிழக்க, 29 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரியும் விராட் கோலியும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த விஹாரி 31 ரன்னில் ஜெயவிக்ரமாவின் சுழலில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆடுவதால் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் கோலிக்கு ஆரவாரமாக உற்சாக வரவேற்பளித்தனர். அதற்கேற்ப நன்றாக தொடங்கிய கோலி, தனஞ்செயா டி சில்வா வீசிய பந்து, நன்கு எழாமல் கோலி எதிர்பார்த்ததை விட மிகத்தணிவாக வந்ததால் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் கோலி. 23 ரன்னில் கோலி ஆட்டமிழந்தார். அந்த பந்து அவ்வளவு கீழாக வரும் என்று எதிர்பார்த்திராத கோலி, சில நொடிகள் அதிர்ந்து நின்று, பிட்ச்சை பார்த்துவிட்டு சென்றார்.
முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே பந்து சரியாக எகிறவில்லை. எனவே இந்த போட்டி முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கானதாக இருக்கும். முதல் செசனில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில், 2வது செசனில் லன்ச் முடிந்து வந்ததும் 5 பவுண்டரிகளை அடித்து அசத்திய ரிஷப் பண்ட் 39 ரன்னில் ஆட்டமிழக்க, 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷ்ரேயாஸ் ஐயருடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.