கோலியின் அதிகப்பிரசங்கித்தனம் கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்கு

By karthikeyan VFirst Published Dec 9, 2019, 1:00 PM IST
Highlights

கேப்டன் கோலி இந்திய கிரிக்கெட் அணிக்குத்தான் கேப்டன் என்பதை உணர்ந்து, தனது அதிகப்பிரசங்கித்தனத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
 

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். ரிஷப் பண்ட் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பிவருகிறார். ஆட்டத்துக்கு ஆட்டம் அனுபவத்தை பெற்று மேம்பட வேண்டிய ரிஷப் பண்ட், அதை செய்யாமல் மீண்டும் மீண்டும் சொதப்பியே வருகிறார். வழக்கம்போலவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலுமே சொதப்பினார். பேட்டிங்கில் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாமல் திணறிய ரிஷப் பண்ட், தட்டுத்தடுமாறி 33 ரன்கள் அடித்தார். விக்கெட் கீப்பிங்கில் எளிய கேட்ச்சை தவறவிட்டார். 

ஏற்கனவே ரிஷப் பண்ட்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் அவற்றை அவர் பயன்படுத்தி கொள்ளாததால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் தவறிழைத்தாலே, ரசிகர்கள் தோனி தோனி என கத்தி அவரை கடுப்பேற்றுகின்றனர். 

தனது கெரியரின் தொடக்கத்தில் இருக்கும் ரிஷப் பண்ட்டை தோனியுடன் ஒப்பிடக்கூடாது என்பது சரிதான். அதை ரசிகர்களுக்கு எடுத்து சொல்வதில் தவறில்லை. அந்தவகையில், ரிஷப் பண்ட்டை தோனியுடன் ஒப்பிட்டு அவரை கிண்டல் செய்ய வேண்டாம். அவரை கிண்டல் செய்யாமல் அவருக்கு ஆதரவு கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஆனால் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலியோ, நான் கோலி இடத்தில் இருந்தால், இந்த கிண்டல்களையெல்லாம் ரிஷப் பண்ட் எதிர்கொள்ளட்டும் என்றுதான் நினைப்பேன். ஏனெனில் இதுபோன்ற கேலி கிண்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவர் மேம்பட வேண்டும் என்று கங்குலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் லூயிஸின் கேட்ச்சை தவறவிட்டார் ரிஷப் பண்ட். இதையடுத்து ரிஷப்பை ரசிகர்கள் கிண்டலடித்தனர். உடனடியாக பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேப்டன் கோலி, ஏன் இப்படி செய்கிறீர்கள் என்கிற ரீதியில் கண்டிப்புடன் நடந்துகொண்டார். 

விராட் கோலி, தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மட்டும்தான் என்பதை உணர வேண்டும். அணியை வழிநடத்துவதுதான் கேப்டன் பணியே தவிர, ரசிகர்களை கட்டுப்படுத்துவது அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருந்தால், அவரது இழுப்புக்கெல்லாம் ரசிகர்கள் வர வேண்டும், அவர் நினைப்பதுபோல மட்டும்தான் நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க கூடாது, எதிர்பார்க்கவும் முடியாது. எதார்த்தத்தை புரிந்துகொண்டு கேப்டன் கோலி இதுபோன்று, ரசிகர்களை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ரசிகர்களின் இந்த கிண்டல்கள் எல்லாம் ரிஷப் பண்ட்டை மனதளவில் வலிமை இழக்க வைக்கும் என்பதால், இதுபோன்ற செயல்களில் கோலி ஈடுபடுகிறார் என்றால், அதை கண்டிப்பாக அவர் நிறுத்த வேண்டும். ஏனெனில் கோலி கட்டுப்படுத்த வேண்டியது ரசிகர்களை அல்ல. இப்படித்தான் இருக்கும் என்ற எதார்த்தத்தை ரிஷப் பண்ட்டிடம் எடுத்துரைத்து, அவர் மனவலிமை இழக்காமல் இருக்க ஆலோசனை வழங்க வேண்டும். அவரது ஆட்டத்திறனை மேம்படுத்த முனைய வேண்டும். அதைவிடுத்து ரசிகர்களை கட்டுப்படுத்தக்கூடாது. ரசிகர்களை கட்டுப்படுத்தவும் முடியாது. இதுதான் உண்மை.
 

click me!