
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவரும் விராட் கோலி, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
ஆனாலும் பேட்டிங்கில் அவரால் இன்னும் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.
ஐபிஎல்லில் கோலி ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல்லிலும் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஆடிய 12 போட்டிகளில் வெறும் 216 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி.
கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவரும் நிலையில், பலரும் பல அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில், தனது மோசமான ஃபார்ம் குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ள விராட் கோலி, எனது கிரிக்கெட் கெரியரில் இதற்கு முன் இதுமாதிரி நடந்ததில்லை. எனவே தான் நான் புன்னகைத்துவிட்டு கடந்து செல்கிறேன். இரைச்சலை தவிர்க்க என்ன செய்வீர்கள்? ஒன்று, டிவியை மியூட் செய்ய வேண்டும் அல்லது வெளியில் இருப்பவர்கள் பேசுவதை கவனிக்கக்கூடாது. நான் இவை இரண்டையுமே செய்கிறேன் என்றார் விராட் கோலி.