
ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இப்போது நடந்துவரும் 15வது சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. ஆர்சிபி அணியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற 2 மிகப்பெரிய வீரர்கள் இணைந்து ஆடியும் ஆர்சிபிக்கு கோப்பை கைகூடவில்லை.
2011ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை 11 சீசன்கள் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிய டிவில்லியர்ஸ், அந்த அணிக்காக 156 போட்டிகளில் ஆடி 4491 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் அவர் ஆடாதது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அவர் இல்லாத குறையை ஃபினிஷிங்கில் தினேஷ் கார்த்திக்கும், தென்னாப்பிரிக்க வீரராக டுப்ளெசிஸ் கேப்டன்சியிலும் நிரப்பி, குறையை தீர்த்துவிட்டனர்.
இந்நிலையில், ஏபி டிவில்லியர்ஸ் பயிற்சியாளராகவாவது ஆர்சிபி அணியில் இணைவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதுகுறித்து விராட் கோலி பேசியுள்ளார்.
டிவில்லியர்ஸ் குறித்து பேசிய விராட் கோலி, டிவில்லியர்ஸை நான் அதிகம் மிஸ் செய்கிறேன். அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர் இப்போது கோல்ஃப் மேட்ச் பார்ப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். ஆர்சிபி அணியின் ஆட்டங்களை தவறவிடாமல் பார்த்துவருகிறார். அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஆர்சிபி அணியில் ஏதாவது ஒரு ரோலில் இணைவார் என்று கோலி தெரிவித்திருக்கிறார்.