
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கு, இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடந்துவரும் டெஸ்ட் போட்டி, 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும்.
99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் 7962 ரன்கள் அடித்திருந்த கோலி, 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 45 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் கஷ்டப்பட்டுவரும் விராட் கோலியிடமிருந்து, அவரது 100வது டெஸ்ட்டில் பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான அடித்தளத்தை சரியாக போட்ட விராட் கோலி, 45 ரன்னில் இலங்கை இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியாவின் அபாரமான பந்தில் போல்டாகி வெளியேறினார்.
விராட் கோலி இந்த டெஸ்ட்டில் 38 ரன்கள் அடித்தபோது, டெஸ்ட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 100வது டெஸ்ட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை விராட் கோலி எட்டினார்.
இதன்மூலம் 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் ஆடியபின்னர், அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்(8553 ரன்கள்), வீரேந்திர சேவாக் (8487 ரன்கள்), சுனில் கவாஸ்கர் (8479) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (8405) ஆகிய நால்வருக்கு அடுத்த 5ம் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.