
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 36ஆவது லீக் போட்டி தற்போது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 48 ரன்கள் எடுத்தார்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் யாஷ் தயாள் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி 204 ரன்களை மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 204 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 223 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பவுண்டரியுடன் விராட் கோலி தனது இன்னிங்ஸை தொடங்கினார். முதல் ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். கடைசி பந்தில் சிக்ஸர் உள்பட இந்த ஓவரில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. 2ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. 3ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். முதல் பந்தை புல்டாஸ் ஆக வீசினார். ஆனால், இறங்கி அடிக்க முயற்சித்த கோலி, அவரிடமே கேட்ச் கொடுத்தார். அதன் பிறகு பந்துக்கு இடுப்புக்கு மேல் வந்ததாக கூறி நோபால் கேட்டு ரெவியூ எடுத்தார்.
ஆனால், அவர் கிரீஸை விட்டு இறங்கி வந்த நிலையில், பந்து ஸ்டெம்பிற்கு மேல் சிறிது இடைவெளியில் இறங்கி வந்தது தெரியவர நோபால் இல்லை என்றும், அவுட் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏமாற்றத்துடன் நடையை கட்டிய கோலி கள நடுவருடன் ஆக்ரோஷமாக பேசிய நிலையில், அங்கிருந்து நடையை கட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.