விராட் கோலி சதம்.. புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்..! ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி

By karthikeyan VFirst Published Sep 8, 2022, 11:00 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த தொடரைவிட்டு வெளியேறிவிட்ட இந்திய அணிக்கு இது ஆறுதல் வெற்றி மட்டுமே.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் ஏற்கனவே இந்த தொடரை விட்டு வெளியேறிவிட்ட இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.

துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்தார். இந்திய அணியில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகியோருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், தீபக் சாஹர், அக்ஸர் படேல் ஆகியோர் ஆடினர்.

இதையும் படிங்க- ரோஹித்தின் சாதனையை காலி செய்த கோலி.. பாண்டிங்கின் சாதனை சமன்..! மீண்டும் சாதனைகளை குவிக்க தொடங்கிய கிங் கோலி

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், தீபக் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங். 

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), கரிம் ஜனத், ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், ஃபரீத் அகமது, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். ராகுலும் கோலியும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 119 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ராகுல் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து 2வது பந்தில் ஆட்டமிழந்தார். 

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். 3 ஆண்டுக்கு பிறகு சதமடித்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 71வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். 61 பந்தில் 122 ரன்களை குவித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் கோலி. கோலியின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது இந்திய அணி.

213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் கரிம் ஜனத், நஜிபுல்லா ஜட்ரான் ஆகிய நால்வரையுமே பவர்ப்ளேயிலேயே வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் ஆஃப்கான் கேப்டன் முகமது நபியை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

அதன்பின்னர் அஸ்மதுல்லா ஓமர்ஸாயையும் புவனேஷ்வர் குமாரே வீழ்த்தினார். 4 ஓவரில் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார், டி20 கிரிக்கெட்டில் 2வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். சிறப்பாகபேட்டிங் ஆடி அரைசதம் அடித்த இப்ராஹிம் ஜட்ரான் 64 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் அடித்தது ஆஃப்கானிஸ்தான் அணி.

இதையும் படிங்க - Asia Cup: அவரை எடுக்காததுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்! ராகுல் டிராவிட், ரோஹித்தை விளாசிய ரவி சாஸ்திரி

கோலியின் சதம், புவனேஷ்வர் குமாரின் 5 விக்கெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த தொடரைவிட்டு ஏற்கனவே வெளியேறிவிட்ட இந்திய அணிக்கு இது வெறும் ஆறுதல் வெற்றி தான்.
 

click me!