விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் டாலராக உயர்ந்ததைத் தொடர்ந்து மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் விராட் கோலி இடம் பெற்று விளையாடி வருகிறார். 3 போட்டிகளில் விளையாடிய கோலி 1, 4, 0 என்று மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய அணி வரும் 20 ஆம் தேதி சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 22ஆம் தேதி வங்கதேசம் அணியையும், 24 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியையும் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். பிராண்டு மதிப்புகளின் அடிப்படையில் விராட் கோலி 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நிலையில் ரன்வீர் சிங் 2ஆவது இடமும், ஷாருக் கான் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 176.9 மில்லியன் டாலர் இருந்த நிலையில் தற்போது அது 29 சதவிகிதம் அதிகரித்து 227.9 மில்லியன் டாலர் வரை பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இது கடந்த 2020 ஆம் ஆண்டு பிராண்ட் மதிப்பை விட மிகவும் குறைவு. 2020 ஆம் ஆண்டு 237.7 மில்லியன் டாலர் பெற்றிருந்தார்.
விராட் கோலியைத் தொடர்ந்து பிராண்ட் மதிப்பின்படி 203.1 மில்லியன் டாலர் பெற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 2ஆவது இடமும், ஷாருக் கான் 120.7 மில்லியன் டாலர் பெற்று 3ஆவது இடம் பிடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து அக்ஷய் குமார் (111.7 மில்லியன் டாலர்) 4ஆவது இடமும், அலியா பட் (101.1 மில்லியன் டாலர்) 5ஆவது இடமும், தீபிகா படுகோனே 96 மில்லியன் டாலர் 6ஆவது இடமும் பிடித்துள்ளனர். இவர்களது வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 95.8 மில்லியன் டாலர் உடன் 7ஆவது இடமும், சச்சின் டெண்டுல்கர் 91.3 மில்லியன் டாலர் உடன் 8ஆவது இடமும், அமிதாப் பச்சன் 9ஆவது இடமும், சல்மான் கான் 81.7 மில்லியன் டாலர் உடன் 10ஆவது இடமும் பிடித்துள்ளனர்.