
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வாமிகா என்று கோலி - அனுஷ்கா தம்பதி பெயர் சூட்டியது.
பிறந்ததிலிருந்து தங்கள் மகள் வாமிகாவின் முகத்தை பொதுவெளியில் காட்டாமலேயே இருந்தனர் கோலி - அனுஷ்கா. குழந்தையை தூக்கிக்கொண்டு வரும்போது முன்கூட்டியே குழந்தையை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் - கேமராமேன்களிடம் கோரிக்கை வைத்துவிடுவார்கள். கேமராமேன்களும் அவர்களது உணர்வுக்கு மதிப்பளித்து புகைப்படம் எடுக்காமல் தவிர்த்துவந்தார்கள்.
இதுவரை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ தங்கள் மகளின் முகத்தை காட்டாமல் இருந்துவந்த கோலி - அனுஷ்கா தம்பதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது முதல் முறையாக வாமிகாவின் முகத்தை காட்டினர்.
இந்த போட்டியை அனுஷ்கா சர்மா மகளுடன் பெவிலியனில் இருந்து கண்டுகளித்தார். கோலி இந்த போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 65 ரன்கள் அடித்தார் கோலி. கோலி அரைசதம் அடித்ததும், அந்த அரைசதத்தை தனது மகளுக்கு அர்ப்பணிப்பதாக சைகையில் தெரிவித்தார். அப்போது பெவிலியனில் அனுஷ்கா சர்மா மகளுடன் நின்றார். அப்போதுதான் வாமிகாவின் முகம் முதல் முறையாக பொதுவெளியில் காட்டப்பட்டது.
அப்படியே விராட் கோலியை உரித்து வைத்திருக்கும் அவரது மகளை முதல் முறையாக கண்ட ரசிகர்கள், அப்பா - மகளின் புகைப்படத்தை ஒப்பிட்டு ரசித்துவருகின்றனர்.