விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார் - அக்தர் அதிரடி

By karthikeyan VFirst Published Jan 23, 2022, 10:09 PM IST
Highlights

விராட் கோலி இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று ஷோயப்  அக்தர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 2014ம் ஆண்டு பொறுப்பேற்ற விராட் கோலி, 2017ம் ஆண்டிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவித்து நிறைய சாதனைகளையும் செய்திருந்தாலும், ஒரு ஐசிசி டிராபியை கூட வென்றதில்லை என்பது விமர்சனமாக இருந்தது.

அதேவேளையில், கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது ஒரு பேட்ஸ்மேனாக அவர் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. எனவே பணிச்சுமையை குறைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி.

டி20 அணிக்கும் ஒருநாள் அணிக்கும் வெவ்வேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது. வெள்ளைப்பந்து அணிகளை ஒரே கேப்டன் வழிநடத்துவதுதான் அணிக்கு நல்லது என்பதால் விராட் கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவையே ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.

இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், யாருமே எதிர்பார்த்திராத விதமாக டெஸ்ட் கேப்டன்சியிலிருந்தும் திடீரென விலகினார் விராட் கோலி. 

இந்நிலையில், விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகவில்லை. கேப்டன்சியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார். விராட் கோலிக்கு நேரம் சரியில்லை. அவர் யார் என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மிகச்சிறந்த மனிதர் மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் கோலி. விராட் கோலி நிறைய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர் களத்திற்கு சென்று அவரது இயல்பான ஆட்டத்தை ஆடி நிறைய ஸ்கோர் செய்ய வேண்டும். சமகாலத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மற்றவர்களை விட அபாரமான சாதனைகளை படைத்திருக்கிறார் என்று அக்தர் தெரிவித்தார்.
 

click me!