கிளப் டீம்ல நான் ஒதுக்கிய வீரர்கள்லாம் ஆடும்போது, நான் மட்டும் பென்ச்சுல உட்காருவது நரக வேதனை! உன்முக்த் சந்த்

By karthikeyan VFirst Published Aug 24, 2021, 8:40 PM IST
Highlights

தான் கேப்டனாக இருந்த கிளப் அணிகளில், தான் சேர்க்க மறுத்து ஒதுக்கிய சில வீரர்களுக்கு எல்லாம் ஆட வாய்ப்பு கிடைக்கும்போது, தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் உட்கார்ந்து பார்ப்பது என்பது மெண்டல் டார்ச்சராக இருந்ததாக, இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து வெளியேறிய உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆட தகுதியான வீரர்கள் ஏராளமானோர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் ஆட அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் இந்திய அணி ஆடியது. அந்தளவிற்கு அதிகமான வீரர்கள் உள்ளனர்.

இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் இருந்தாலும், அணியில் 11 பேர் மட்டுமே ஆடமுடியும். அதனால் நிறைய திறமையான வீரர்களுக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

அந்தமாதிரியான வீரர்களில் ஒருவர் தான் உன்முக்த் சந்த். 2012ம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன். அந்த உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 111* ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, கோப்பையை வென்று கொடுத்தார்.

அதன்பின்னர் இந்தியா ஏ அணியில் ஆடிய உன்முக்த் சந்த், 2015 வரை இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் இருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2014 டி20 உலக கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களுக்கான 30 வீரர்களை கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்த உன்முக்த் சந்துக்கு இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஐபிஎல்லில் ஆட வாய்ப்பு கிடைத்த வீரர்கள், அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடி தங்கள் திறமையை நிரூபித்து, இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளனர். அப்படியான வாய்ப்பு கூட உன்முக்த் சந்த்துக்கு கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் 21 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள அவர், 300 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல்லிலும் கவர்ச்சிகரமான பேட்டிங் ஆடாததாலும், அப்படி தன்னை நிரூபிப்பதற்கு போதிய வாய்ப்பு கிடைக்காமலும் தவித்துவந்த உன்முக்த் சந்த், இனிமேல் இந்திய கிரிக்கெட்டில் தனக்கு இடமில்லை என்பதை உணர்ந்து, அண்மையில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வறிவித்தார்.

இந்திய அணியில் தற்போது மிகக்கடும் போட்டி நிலவிவரும் நிலையில், இனிமேல் தனக்கு இந்திய அணியில் ஆடுவதற்கோ, ஐபிஎல்லில் ஆடவோ வாய்ப்பு கிடைக்காது என்ற எதார்த்தத்தை உணர்ந்திருந்தாலும், அதற்காக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கவும் விரும்பாத உன்முக்த் சந்த், அமெரிக்க அணிக்காக ஆட ஏதுவாக, இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

இந்நிலையில், அதுகுறித்து ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசியுள்ள உன்முக்த் சந்த், கடந்த 2 ஆண்டுகள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கடந்த சீசனில் டெல்லி அணிக்காக ஆட எனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஒவ்வொருமுறையும் இப்படியே நடந்துகொண்டிருக்கிறது. எனக்கு ஆடுவதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. இனியும் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றும் தெரியவில்லை. எனவே தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஏமாற நான் விரும்பவில்லை. கிளப் அணிகளில் நான் வேண்டாமென்று ஒதுக்கிய வீரர்கள் சில வீரர்களுக்கு எல்லாம் ஆட வாய்ப்பு கிடைக்கும்போது, அதை வெளியில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு மெண்டல் டார்ச்சராக இருந்தது என்று உன்முக்த் சந்த் தனது வேதனையை ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பகிர்ந்துள்ளார்.
 

click me!