டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் வரலாறு படைத்த உமேஷ் யாதவ்.. சச்சின் செய்த சாதனையை செய்து அசத்தல்

By karthikeyan VFirst Published Oct 21, 2019, 10:10 AM IST
Highlights

ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார். 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது, 9ம் வரிசையில் இறங்கிய உமேஷ் யாதவ், களத்திற்கு வந்ததும் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாசினார். லிண்டேவின் பவுலிங்கில் தொடர்ந்து 2 சிக்ஸர் விளாசிய உமேஷ் யாதவ், லிண்டேவின் அடுத்த ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட்டும் ஆனார்.

மொத்தமாக 5 சிக்ஸர்களுடன் 10 பந்துகளில் 31 ரன்களை விளாசி, இந்திய அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தி கொடுத்தார். அதிரடியான பேட்டிங்கின் மூலம் ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் பேட்டிங்கில் சாதனைகளை படைத்துள்ளார். 

உமேஷ் யாதவ் படைத்த சாதனைகள்:

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் களத்திற்கு வந்ததும் முதல் 2 பந்துகளை சிக்ஸர்கள் விளாசியதில், உலகளவில் மூன்றாவது வீரர் என்ற சாதனையையும், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் உமேஷ் யாதவ் படைத்துள்ளார். 

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக அடிக்கப்பட்ட 30 ரன்கள் இதுதான். நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங் 11 பந்துகளில் 31 ரன்கள் அடித்ததுதான், விரைவாக அடிக்கப்பட்டது. தற்போது அதை உமேஷ் முறியடித்துள்ளார். 9 பந்துகளிலேயே 30 ரன்களை கடந்துவிட்ட உமேஷ், 10வது பந்தில் அவுட்டானார். 

3. இந்த இன்னிங்ஸில் உமேஷ் யாதவின் ஸ்டிரைக் ரேட் 310. டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 10 பேட்டிங் ஆடிய வீரரின் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டும் இதுதான். 
 

click me!