படுகேவலமா சொதப்பிய தவான்.. அடித்து நொறுக்கிய பார்த்திவ் படேல்.. அரையிறுதியில் குஜராத்

By karthikeyan VFirst Published Oct 20, 2019, 4:05 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 

லீக் சுற்று முடிந்து காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. இன்று 2 காலிறுதி போட்டிகள் நடந்தன. அதன் ஒரு போட்டியில் குஜராத் அணியும் டெல்லி அணியும் மோதின. 

பெங்களூருவில் உள்ள ஜஸ்ட் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. மழையின் குறுக்கீட்டால் இந்த போட்டி 49 ஓவர் போட்டியாக நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி, 49 ஓவரில் 223 ரன்களை அடித்தது. 

டெல்லி அணியின் தொடக்க வீரரான சீனியர் வீரர் ஷிகர் தவான் 8 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடி ரன்னே எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அந்த அணியின் கேப்டன் த்ருவ ஷோரே மட்டுமே பொறுப்பாக ஆடி 91 ரன்களை குவித்தார். 9 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார் த்ருவ். அவரைத்தவிர மற்ற எந்த வீரருமே சரியாக ஆடாததால் அந்த அணி 223 ரன்கள் மட்டுமே அடித்தது. 

224 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேலும் பிரியங்க் பஞ்சாலும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 150 ரன்களை குவித்தனர். வழக்கம்போல தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பார்த்திவ் படேல், 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பிரியங்க் பஞ்சாலும் 80 ரன்களை குவித்தார். இவர்கள் இருவரும் அமைத்து கொடுத்த அபாரமான அடித்தளத்தால் அந்த அணி 40 ஓவருக்குள்ளாகவே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 
 

click me!