
பிரபல அஸ்ஸாமி பாடகர் ஜுபீன் கர்குக்கு செப்டம்பர் 30 அன்று கவுகாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் நடைபெறும் மகளிர் ODI உலகக் கோப்பை 2025 தொடக்க விழாவில் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. பிரபல பாடாகரான ஜுபீன் கர்க் கடந்த 19ம் தேதி அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின் போது நீரில் மூழ்கி தனது 52வது வயதில் காலமானார்.
வடகிழக்கு இந்திய விழாவில் கலந்துகொள்வதற்காக ஜுபீன் சிங்கப்பூர் சென்றிருந்தார். ஆனால் அதுவே அவருக்கு இறுதி பயணமாக அமைந்துள்ளது. நீரில் மூழ்கிய பிறகு அஸ்ஸாமி பாடகருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவருக்கு சிபிஆர் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது திடீர் மரணத்தைத் தொடர்ந்து அந்த விழா ரத்து செய்யப்பட்டது.
ஜுபீன் கர்க்கின் அகால மரணம் அஸ்ஸாமில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள், சக கலைஞர்கள் மற்றும் இசைத்துறையினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மகளிர் ODI உலகக் கோப்பை 2025 தொடக்கப் போட்டி இந்தியா மற்றும் இலங்கை இடையே கவுகாத்தியில் நடைபெறுவதால், பிசிசிஐ மற்றும் அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் (ACA) ஜூபினுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்த உள்ளன.
மகளிர் ODI உலகக் கோப்பையில் கெளரவம்
ஜூபின் கர்க் அஸ்ஸாமி மற்றும் இந்திய இசைக்கு இணையற்ற பங்களிப்புகளுக்காக கொண்டாடப்பட்டவர். இதனால் கவுகாத்தியில் நடைபெறும் மகளிர் ODI உலகக் கோப்பை தொடக்க விழாவில் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அஸ்ஸாமைச் சேர்ந்த பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, ஜூபின் கர்க்கிற்கு 40 நிமிட சிறப்பு அஞ்சலி செலுத்தப்படும் என்றும், இது இசைக்கு அவர் ஆற்றிய வாழ்நாள் பங்களிப்புகள், அவரது கலாச்சார தாக்கம் மற்றும் அஸ்ஸாமி மற்றும் இந்திய கலையில் அவரது நீடித்த மரபைக் கொண்டாடும் வகையில் இருக்கும் என்றும் உறுதிப்படுத்தினார்.
பிசிசிஐ செயலாளர் உறுதி
“ஜூபின் மரணத்தைத் தொடர்ந்து அஸ்ஸாமில் பெரும் துக்கமும், சோகமான சூழலும் நிலவுகிறது. அந்தச் சூழலுக்கு ஏற்ப, மரியாதை செலுத்தப்பட வேண்டிய ஒரு நபராக, அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கமும், பிசிசிஐயும் தொடக்க விழாவின் போது ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தும். இது ஜூபினுக்கான எங்கள் மரியாதையாகவும், அஞ்சலியாகவும் இருக்கும். இது ஜூபின் நினைவாக 40 நிமிட நிகழ்ச்சியாக இருக்கும்” என்று சைகியா ஸ்போர்ட்ஸ்டாரிடம் கூறினார்.