வரும் 12 ஆம் தேதி (நாளை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே போட்டி நடைபெற உள்ள நிலையில் 750 ரூபாய் கொண்ட டிக்கெட் கள்ளச் சந்தையில் ரூ.5000க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே சென்று அமர்ந்து பார்க்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய போட்டிகளை உதாரணமாக சொல்லலாம். இரு போட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே நிலை தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தான் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான 17ஆவது போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. சிஎஸ்கே - ஆர் ஆர் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்று தீர்ந்த நிலையில் கவுண்டர் டிக்கெட்டுக்காக ஏராளமான ரசிகர்கள் இரவு முழுவதும் தூங்காமல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடைப்பதில்லை. ஆன்லைன் டிக்கெட்டும் விற்று தீர்ந்த நிலையில், 750 ரூபாய் கொண்ட டிக்கெட்டை சமூக வலைதளம் மூலமாக பலரும் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்கின்றனர். சில நேரங்களில் ரூ.6000 வரையிலும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக சென்னையில் நடந்த போட்டியின் போது டிக்கெட்டை பிளாக்கில் விற்ற 13 பேரை போலிசார் கைது செய்தனர். இந்த நிலையில், தான் நாளை அடுத்த போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கும் கள்ளச் சந்தை விற்பனை படு ஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த டிக்கெட் விற்பனை குறித்து சிஎஸ்கே அணியின் முதன்மை நிர்வாக அதிகாரி, காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் டிக்கெட்டுகளில் 40 சதவிகிதம் மட்டுமே ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 60 சதவிகித டிக்கெட்டுகளில் 20 சதவிகிதம் பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்புகளுக்கு 13000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
IPL 2023: 5 சிக்ஸர்கள் அடித்த ரிங்கு சிங் ஆரம்பத்தில் துப்புரவு தொழிலாளி வேலை பார்த்தவர்!
ஆகையால் தான் ரசிகர்களுக்கு 15,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்க முடிகிறது. அந்த டிக்கெட்டுகளும் சிறிது நேரத்திற்குள்ளாகவே விற்று தீர்ந்து விடுகின்றன. டிக்கெட்டுகளை ஸ்பான்சர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.