கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி.. என்னென்ன மாற்றங்கள்..?

By karthikeyan VFirst Published Aug 13, 2019, 12:41 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் களமிறங்கும் வீரர்கள், என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்பன குறித்து பார்ப்போம். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மூன்றாவது போட்டி நாளை போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடக்கவுள்ளது. இந்த போட்டியிலும் வென்று ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளன. எனவே இரு அணிகளும் ஒவ்வொரு நோக்கத்துடன் கடுமையாக போராடும் என்பதால் போட்டி கண்டிப்பாக மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். 

இரண்டாவது போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் இந்திய அணி, கடைசி போட்டியிலும் களமிறங்கும். ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி, அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ரிஷப் பண்ட் இன்னும் கொஞ்சம் மேம்பட வேண்டும். ஆனால் அவர்தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், அவர் சரியாக ஆடாவிட்டாலும், அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை கேப்டன் கோலியே உறுதிப்படுத்திவிட்டார். 

ஷ்ரேயாஸ் ஐயரின் வருகையால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் தவான் மட்டும்தான் ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். டி20 தொடரில் தொடங்கி, இரண்டாவது ஒருநாள் போட்டி வரை தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. பேட்டிங்கில் தவானின் ஃபார்ம் மட்டும்தான் பிரச்னையாக இருக்கிறது. 

பவுலர்களை பொறுத்தமட்டில் தங்களது பணியை செவ்வனே செய்ததால், பவுலிங் யூனிட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே கடைசி போட்டியில் அதே அணியுடன் தான் இந்திய அணி களமிறங்கும். 

கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது. 
 

click me!