இதை செஞ்சே தீரணும்.. ராகுல் டிராவிட்டுக்கு ரவி சாஸ்திரியின் முக்கியமான மெசேஜ்

By karthikeyan VFirst Published Jan 28, 2022, 9:54 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கியமான மெசேஜை கூறியுள்ளார்.
 

இந்திய அணிக்கு கடந்த ஆண்டு(2021) அக்டோபரிலிருந்து அனைத்துவகையிலும் பின்னடைவாக உள்ளது. டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடனேயே படுதோல்வி அடைந்து வெளியேறியது.

விராட் கோலி அனைத்துவிதமான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மிடில் ஆர்டர் பிரச்னை தொடர்ந்துவருகிறது. தென்னாப்பிரிக்காவிடம் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.

இந்திய அணி இன்னும் வலுவான காம்பினேஷனாக செட்டில் ஆகாத நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பையும், அடுத்த ஆண்டு (2023) ஒருநாள் உலக கோப்பையும் நடக்கவுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளதால் இந்திய அணி அதற்குள்ளாக சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தயாராக வேண்டும்.

இது புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முன்னிருக்கும் கடும் சவால். 4 ஆண்டுகள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் கடந்த டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், அதன்பின்னர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இந்திய அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார் ராகுல் டிராவிட்.

இந்நிலையில், இந்திய அணி குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிக முக்கியமான காலக்கட்டம். அடுத்த 8-10 மாதங்கள் மாற்றத்தை நோக்கிய பயணமாக இருக்கும். அடுத்த 4-5 ஆண்டுகளுக்கான வீரர்களை கண்டறிந்து அணியை கட்டமைக்க வேண்டும். இளமையும் அனுபவமும் கலந்த கலவையான அணியாக இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டால் சிலசமயங்களில் மாற்றங்கள் தேவைப்படும். இதுதான் சரியான நேரம். அடுத்த 6 மாதங்களில் இளம் வீரர்களை உருவாக்க வேண்டும். இப்போதிருக்கும் அணியையே மாற்றம் செய்யாமல் தொடர்ந்தால், பின்னால் மாற்றங்கள் செய்வது மிகக்கடினமாக இருக்கும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
 

click me!