அச்சமில்லாத ஆட்டத்துக்கும் அசால்ட்டுத்தனமான ஆட்டத்துக்குமான வித்தியாசத்தை தெரிஞ்சுக்கங்க தம்பி.. பொறுப்பேற்றதுமே பொளந்துகட்டும் பேட்டிங் கோச்

By karthikeyan VFirst Published Sep 18, 2019, 1:21 PM IST
Highlights

பயமற்ற ஆட்டத்துக்கும் பொறுப்பற்ற ஆட்டத்துக்குமான வித்தியாசத்தை இளம் வீரர்கள் உணர வேண்டும் என இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார். 

இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் தொடர்ந்து சிதைத்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக சொதப்பிவரும் ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்காலம் என இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நெருக்கடி கொடுக்காமல் இருந்தாலும், ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. இந்திய ஒருநாள் அணியின் சிக்கலாக இருக்கும் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டும் கூட, நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் தான் இறக்கப்பட்டார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நான்காவது வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட், இரண்டிலுமே சொதப்பினார். ஒரு போட்டியில் 20 ரன்கள் அடித்த அவர், அடுத்த போட்டியில் டக் அவுட்டானார். அதேபோல் டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் 24 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்களும் மட்டுமே அடித்தார். ரிஷப் பண்ட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவருக்கான இடத்தை உறுதிசெய்ய முடியும்.

சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் என விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டி நிற்பதால், ரிஷப் பண்ட் அவருக்கான இடத்தை உறுதிசெய்ய நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். ரிஷப் பண்ட் தான் எதிர்காலத்தின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பது உறுதிப்படுத்து தெரிவிக்கப்பட்டதால், அவர் நன்றாக ஆடாவிட்டாலும் அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் தான் படுதீவிரமாக கவனிக்கப்படுகிறார். அதனால் இந்த தொடரில் கண்டிப்பாக சிறப்பாக ஆடி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில், இனியும் ரிஷப் பண்ட் வாய்ப்புகளை வீணடிக்கும் பட்சத்தில், அணியில் அவரது இடம் பறிபோவது உறுதி. ரிஷப் பண்ட்டின் அவசரமும், தவறான ஷாட் செலக்‌ஷனும் தான் அவர் சோபிக்க முடியாமல் போவதற்கு காரணமே தவிர அவர் நல்ல பேட்ஸ்மேன் தான். அவரது தவறான ஷாட் செலக்‌ஷன் தான் அவர் செய்யும் தவறு என்பதை அறிந்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அண்மையில் ரிஷப் பண்ட் ஷாட் செலக்‌ஷனில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மோசமான ஷாட்டுகளை ஆடினால் முட்டிக்கு முட்டி தட்டிருவேன் எனவும் பாசமாக மிரட்டியிருந்தார். 

இந்நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான விக்ரம் ரத்தோரும் ரிஷப் பண்ட்டுக்கு தனது அறிவுரையை கூறியுள்ளார். ரிஷப் பண்ட் குறித்து பேசிய விக்ரம் ரத்தோர், பயமற்ற ஆட்டத்துக்கும் கவனக்குறைவான பொறுப்பற்ற ஆட்டத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை இளம் வீரர்கள் உணர வேண்டும். அனைத்து வீரர்களுமே பயமில்லாமல் ஆடவேண்டும் என்பதே அணியின் விருப்பம். ஆனால் கவனக்குறைவாகவோ பொறுப்பை உணராமலோ ஆடக்கூடாது. ரிஷப் பண்ட்டின் வித்தியாசமான ஷாட்டுகள் தான் அவரது ஸ்பெஷலே. அதனால் அவர் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடுவதைத்தான் அணி விரும்புகிறது. ஆனால் அசால்ட்டுத்தனத்தை அனுமதிக்க முடியாது என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்தார். 

click me!