ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் எத்தனை மாற்றங்கள்..? உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Nov 3, 2021, 3:08 PM IST
Highlights

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை கடினமாக்கி கொண்டுள்ளது. 

இனி ஆடும் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றாலும் கூட, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இது பெரும்பாலும் சாத்தியமற்றது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தேர்வும், இந்திய அணியின் முடிவுகளும் மோசமாக இருந்ததால், அவைதான் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. இந்திய அணி தேர்வு முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி, இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணி இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. எனவே ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இவற்றில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க - T20 World Cup ஆஃப்கானிஸ்தான் அணிக்கு சொந்த பணத்தில் ஸ்பான்சர் செய்த முகமது நபி? தீயாய்பரவும் தகவல்!உண்மை என்ன?

எனவே இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியை எளிதாக எடை போட்டுவிட முடியாது. இந்த உலக கோப்பையில் பவர்ப்ளேயில் சராசரியாக அதிக ரன்களை குவித்த அணியாக ஆஃப்கானிஸ்தான் அணி திகழ்கிறது. மேலும், ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகிய 3 உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டு எதிரணிகளை அச்சுறுத்திவரும் ஆஃப்கானிஸ்தான் அணியை இந்திய அணி மிகக்கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது, 2018 ஆசிய கோப்பை, 2019 ஒருநாள் உலக கோப்பை ஆகிய தொடர்களில் இந்திய அணிக்கு ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவால் அளித்துள்ளது. எனவே ஆஃப்கானிஸ்தான் அணியை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் இந்திய அணி.

இந்நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். முதுகுவலி காரணமாக கடந்த போட்டியில் ஆடாத சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் ஆட வாய்ப்பில்லை. அதனால் இந்த போட்டியில் இஷான் கிஷனே ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் கேஎல் ராகுலுடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்குவார். 3ம் வரிசையில் ரோஹித், 4ம் வரிசையில் கோலி என கடந்த போட்டியில் ஆடிய அதே பேட்டிங் ஆர்டருடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அஷ்வினை சேர்க்க வேண்டும் என்ற வலுவான வலியுறுத்தல்கள் இருந்தாலும், அஷ்வினை சேர்க்க வாய்ப்பில்லை. வருண் சக்கரவர்த்திக்கு தொடர் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இந்திய அணி:

கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.
 

click me!