மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. மெயின் தலைகள் எல்லாம் காலி

By karthikeyan VFirst Published Feb 8, 2020, 1:05 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, மளமளவென முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது. 

தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியில் ஆடும் இந்திய அணி, டாஸ் வென்று, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் நிகோல்ஸும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தபோதிலும் பின்னால் வந்த வீரர்கள் அதை பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை அவர்கள் சேர்த்தனர். நிகோல்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் பிளண்டெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி ஆடிய கப்டில், 79 ரன்களில் ரன் அவுட்டானார். 

இதையடுத்து டெய்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் கேப்டன் டம லேதம், ஜிம்மி நீஷம், காலின் டி கிராண்ட் ஹோம், சாப்மேன், டிம் சௌதி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழந்தனர். டெய்லர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்ததுடன், அடித்து ஆடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். அவரது பொறுப்பான பேட்டிங்கால், 42வது ஓவருக்கு பின்னர் விக்கெட்டையே இழக்காத நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 273 ரன்களை அடித்தது. 

சிறிய மைதானமான ஆக்லாந்தில் 274 ரன்கள் என்பது எளிதாக அடிக்கக்கூடிய இலக்கு. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தினார். மயன்க் அகர்வால் வெறும் 3 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து பிரித்வி ஷாவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடி பவுண்டரிகளை அடித்த பிரித்வி ஷா, 19 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் அறிமுகமான ஜேமிசனின் பந்தில் போல்டானார். பிரித்வி ஷா அடித்த 24 ரன்களுமே பவுண்டரிகளின் மூலம் கிடைத்தவை. அந்தளவிற்கு சிறப்பாக ஆடிய அவரை ஜேமிசன் வீழ்த்தினார். இதையடுத்து கோலி 15 ரன்களிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து இந்திய அணி 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷ்ரேயாஸ் ஐயருடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும். இல்லையென்றால் இந்திய அணி வெற்றி பெறுவது கடினமாகிவிடும். சேஸிங் மன்னன் கோலியும் டாப் ஃபார்மில் இருக்கும் ராகுலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரிய இழப்பு.

click me!