கப்டில், டெய்லர் அபாரம்.. சீட்டுக்கட்டை போல சரிந்த நியூசி., பேட்டிங் ஆர்டர்.. இந்திய அணிக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Feb 8, 2020, 11:29 AM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று ஆக்லாந்தில் நடந்துவருகிறது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்கியது. 

இந்த போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த போட்டியில் 84 ரன்களை வழங்கிய குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹலும், ஷமிக்கு பதிலாக நவ்தீப் சைனியும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டிலும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்தனர். 41 ரன்களில் நிகோல்ஸ் ஆட்டமிழந்தார். நிகோல்ஸின் விக்கெட்டை சாஹல் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த டாம் பிளண்டெல் 22 ரன்களில ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கப்டிலுடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருந்த கப்டில், 79 ரன்களில் ரன் அவுட்டானார். டெய்லர் ஷார்ட் தேர்டு மேன் திசையில் அடித்த பந்தை ஷர்துல் தாகூர் பிடித்தார். ஆனால் அதற்கு கப்டில் ரன் ஓடினார். எந்தவித தவறும் செய்யாமல் அந்த பந்தை பிடித்து கீப்பர் ராகுலிடம் த்ரோ அடித்தார் தாகூர். அதை பிடித்து வேகமாக ரன் அவுட் செய்தார் ராகுல். எனவே 79 பந்தில் 79 ரன்கள் அடித்து கப்டில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேனான கப்டில், பந்துக்கு நிகரான ரன்கள் மட்டுமே அடித்தார். அவர் அதிரடியாக ஆடி அதை ஈடுகட்டுவதற்கு முன், ரன் அவுட் செய்யப்பட்டார். 

இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கப்டில் அவுட்டாகும்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 29.2 ஓவரில் 159 ரன்கள். அதன்பின்னர் டெய்லர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, கேப்டன் டாம் லேதம், ஜிம்மி நீஷம், காலின் டி கிராண்ட் ஹோம், மார்க் சாப்மேன், டிம் சௌதி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்த பின்னர், கடைசி ஓவர்களில் முடிந்தவரை அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த அனுபவ வீரர் டெய்லர், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 

42வது ஓவரில் 8வது விக்கெட்டாக டிம் சௌதியின் விக்கெட்டை வீழ்த்திய இந்திய பவுலர்களால், அதன்பின்னர் விக்கெட்டே வீழ்த்த முடியவில்லை. டெய்லரும் அறிமுக வீரர் கைல் ஜேமிசனும் இணைந்து எஞ்சிய 8 ஓவர்களிலும் பேட்டிங் ஆடினர். 42 ஓவரில் 200 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நியூசிலாந்து அணிக்கு, கடைசி 8 ஓவரில் சுமார் 80 ரன்கள் கிடைத்தது. டெய்லரும் ஜேமிசனும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியால் கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அரைசதம் அடித்த டெய்லர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 74 பந்தில் 73 ரன்களும் ஜேமிசன் 24 பந்தில் 25 ரன்களும் அடித்தனர். 

அனுபவ வீரரான டெய்லரின் பொறுப்பான பேட்டிங்கால், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 273 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை அடித்தது. சிறிய மைதானமான ஆக்லாந்தில் இந்த இலக்கு எளிதாக அடிக்கக்கூடியது. எனவே இந்திய அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும். 
 

click me!