4 ஆண்டில் முதன்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா.. இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published May 1, 2020, 5:11 PM IST
Highlights

2016ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதன்முறையாக முதலிடத்தை இழந்துள்ளது. 
 

இந்திய அணி 2016ம் ஆண்டு அக்டோபரிலிருந்து தொடர்ச்சியாக மூன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்துவந்தது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கூட அதிகமான வெற்றிகளுடன் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், முதலிடத்தில் இருந்த இந்திய அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தையும் நியூசிலாந்து அணி 115 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன. 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய நேரடியாக மூன்றாமிடத்திற்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. 2016-2017 காலக்கட்டத்தில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலுமே(12) வென்றது.

இந்நிலையில், அந்த தரவுகளை தற்போதைய டெஸ்ட் தரவரிசை மதிப்பீட்டில் இருந்து நீக்கிவிட்டு, புதிதாக மதிப்பீடு செய்யப்பட்டதுதான், இந்தியாவின் பின்னடைவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசை பட்டியல், 2019ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு நடந்த போட்டிகளுக்கு 100% மற்றும் அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் நடந்த போட்டிகளுக்கு 50% மதிப்பீடு செய்ய கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. அதனால் இந்திய அணி பின் தங்கியதாக தெரிகிறது. ஆனாலும் 2019ம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் தொடங்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக வெற்றிகளுடன் முதலிடத்தில் இருப்பது இந்திய அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!