வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாதனைகளை குவித்த இந்திய அணி.. தாதாவை தூக்கியடித்து தலயை சமன் செய்த கோலி

By karthikeyan VFirst Published Aug 26, 2019, 12:56 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, பல சாதனைகளை படைத்துள்ளது. அதேபோல கேப்டன் கோலியும் இந்திய அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உருவெடுத்துள்ளார். 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கான முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆண்டிகுவாவில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் மட்டுமே அடித்தது. 

75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரஹானே-ஹனுமா விஹாரியின் அபாரமான பேட்டிங்கால், 343 ரன்களை குவித்தது. இதன்மூலம் மொத்தமாக 418 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 419 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 419 ரன்கள் என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வெறும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியும், கேப்டன் கோலியும் பல சாதனைகளை படைத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். 

இந்திய அணியின் சாதனைகள்:

1. வெளிநாட்டில் இந்திய அணி அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற பெரிய வெற்றி இதுதான். இந்த போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக 2017ல் இலங்கையில் அந்த அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. தற்போது அந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. 

2. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்(உள்நாட்டு தொடர் - வெளிநாட்டு தொடர் என்ற பேதமில்லாமல்) இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றிகளில் இது நான்காவது பெரிய வெற்றி. 

3.  டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அடித்த மிகக்குறைவான ஸ்கோர் இதுதான்(இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த 100 ரன்கள்). இதற்கு முன்னதாக 2006ல் அடித்த 103 ரன்கள் தான், அந்த அணி இந்தியாவிற்கு எதிராக அடித்த குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. 

கேப்டன் கோலியின் சாதனைகள்:

1. வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் கோலியின் தலைமையில் இந்திய அணி பெற்ற 12வது டெஸ்ட் வெற்றி இது. இதன்மூலம் வெளிநாட்டில் அதிக போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் கங்குலியிடம் அந்த சாதனை இருந்தது. கங்குலியின் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் 11 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது. தோனியின் தலைமையில் 6 வெற்றிகளையும் டிராவிட்டின் தலைமையில் 5 வெற்றிகளையும் இந்திய அணி பெற்றுள்ளது. ஒரு கேப்டனாக கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். 

2. இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் தோனியை சமன் செய்துள்ளார் கோலி. தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 27 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். கோலி 47 போட்டிகளில் 27ல் வென்று தோனியின் ரெக்கார்டை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 21 வெற்றிகளுடன் கங்குலி மூன்றாமிடத்திலும் 14 வெற்றிகளுடன் அசாருதீன் நான்காமிடத்திலும் உள்ளனர். 

click me!