சப்ஸ்டிடியூட்டை வச்சே சாதிச்சுட்டீங்க.. தமிழ் பசங்க அசத்தியது ரொம்ப மகிழ்ச்சி.! முதல்வர் பழனிசாமி வாழ்த்து

By karthikeyan VFirst Published Jan 19, 2021, 8:38 PM IST
Highlights

ஆஸி., மண்ணில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
 

ஆஸி.,க்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. 2018-2019 ஆஸி., சுற்றுப்பயணத்தில், முதல் முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி, 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்வது என்பதே கடினமான காரியம். அதிலும் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறியபோதிலும், இந்திய அணி மாற்று வீரர்களை தொடர்ச்சியாக களமிறக்கியது. கடைசி டெஸ்ட்டில் எல்லாம், இருக்கும் வீரர்களை வைத்து ஆடும் நிலைக்கு வந்தது. ஆனால் மன உறுதியையும் போராட்டத்தையும் விட்டுவிடாமல் கடைசி வரை கடுமையாக போராடி ஜெயித்தது இந்திய அணி.

முதல் டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு கேப்டன் விராட் கோலி, அவருக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இந்தியா திரும்பிவிட்டார். முதல் டெஸ்ட்டில் ஷமி, 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் காயமடைந்து, அத்துடன் தொடரை விட்டு விலகினர். 3வது டெஸ்ட்டுக்கு முந்தைய பயிற்சியின்போது, கேஎல் ராகுல் காயத்தால் விலக, 3வது டெஸ்ட்டில் ஹனுமா விஹாரி, ஜடேஜா, பும்ரா, அஷ்வின் ஆகிய 4 முக்கிய வீரர்களும் காயத்தால் விலகினர்.

அதனால் கடைசி டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகிய 2 அறிமுக வீரர்கள் மற்றும் அனுபவமே இல்லாத ஷர்துல் தாகூர், சைனி, சிராஜ் ஆகியோருடன் களம் கண்டது இந்திய அணி. அதிலும் சைனி 2வது இன்னிங்ஸில் காயத்தால் ஒருசில ஓவர்கள் மட்டுமே வீசினார். இப்படியாக இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு காய சோகம் தொடர்ந்தது. ஆனாலும் அபாரமாக ஆடி இந்திய அணி தொடரை வென்றது.

இந்நிலையில், இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற  இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின்(அஷ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர்) சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்று வாழ்த்து தெரிவித்தார்.
 

பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்.
இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)
click me!