SMAT 2021 அரையிறுதியில் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய தமிழ்நாடு.. ஃபைனலுக்கு முன்னேற்றம்..! சரவண குமார் 5 விக்கெட்

By karthikeyan VFirst Published Nov 20, 2021, 2:15 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதியில் ஹைதராபாத் அணியை அசால்ட்டாக வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 

நடப்பு சாம்பியனான தமிழ்நாடு, ஹைதராபாத், விதர்பா, கர்நாடகா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் ஒரு அரையிறுதி போட்டியிலும், கர்நாடகா - விதர்பா அணிகள் மற்றொரு அரையிறுதி போட்டியிலும் மோதின. 

தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தமிழ்நாடு, அணி, ஹைதராபாத் அணியை வெறும் 90 ரன்களுக்கு பொட்டளம் கட்டியது.

ஹைதராபாத் அணியில் 8ம் வரிசையில் இறங்கிய டனய் தியாகராஜன் அதிகபட்சமாக 25 ரன்கள் அடித்தார். அவர் ஒருவர் தான் ஹைதராபாத் அணி இரட்டை இலக்க ரன் அடித்த வீரர். மற்ற அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். ஹைதராபாத் அணியில் ஒருவர் கூட நன்றாக விளையாடாததன் விளைவாக, அந்த அணி வெறும் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தமிழ்நாடு அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மிதவேகப்பந்துவீச்சாளர் சரவணகுமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 3.3 ஓவரில் வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சரவணகுமார்.

இதையடுத்து வெறும் 91 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீஷன் (1), ஹரி நிஷாந்த் (14) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின்னர் கேப்டன் விஜய் சங்கர் (43) மற்றும் சாய் சுதர்ஷன் (34) ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி 15வது ஓவரில் இலக்கை அடித்து தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்தனர்.

8 விக்கெட் வித்தியாசத்தில் அரையிறுதியில் ஹைதராபாத் அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான தமிழ்நாடு அணி, இந்த முறையும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை மீண்டும் வெல்லும் வேட்கையில் உள்ளது தமிழ்நாடு அணி.
 

click me!