நாளை காலை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்த தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இதுவரையில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்திய அணிகள் யாவும் ஒருமுறை கூட டிராபியை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்கான 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதே போன்று 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் போது மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. போட்டிக்கு முன்னதாகவும், போட்டி நடைபெறும் போதும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இந்த அரையிறுதிப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு போட்டியின் நேரத்திலிருந்து கூடுதலாக 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியும் போட்டி முடிக்கப்படவில்லை என்றால், அதற்கு அடுத்த நாள் ரிசர்வ் டேயாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் 190 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதற்குள்ளாக போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.
ஆனால், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே இல்லை. எனினும், 250 நிமிடங்கள் கிட்டத்தட்ட 4 மணி நேரமும் 10 நிமிடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் எந்த அணி சிறப்பாக விளையாடி முதலிடத்தில் இருக்கிறதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன்படி சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 2ஆவது இடத்தில் இங்கிலாந்து இருக்கிறது.
அந்த வகையில் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியா தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதே போன்று தான், முதல் அரையிறுதிப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறும். எனினும், மழையால் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.