பிக்பேஷ் லீக் டைட்டிலை 2வது முறையாக வென்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. 3வது முறையாக ஃபைனலில் தோற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ்

By karthikeyan VFirst Published Feb 9, 2020, 3:45 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரின் இறுதி போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அணி இரண்டாவது முறையாக டைட்டிலை வென்றது. 
 

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 லீக் தொடர் நடந்தது. இதன் இறுதி போட்டியில் மோயிஸஸ் ஹென்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும் மோதின. 

சிட்னியில் நடந்த இந்த போட்டி, மழை காரணமாக 12 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, சிக்ஸர்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

சிக்ஸர்ஸ் அணியின் ஜேம்ஸ் வின்ஸ் வெறும் 2 ரன்னில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் ஃபிலிப், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 29 பந்தில் 52 ரன்களை ஃபிலிப் விளாசினார். ஸ்மித் 12 பந்தில் 21 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹென்ரிக்ஸும் டேனியல் ஹியூக்ஸும் சரியாக ஆடவில்லை. ஆனால் ஜோர்டான் சில்க் அதிரடியாக ஆடி 15 பந்தில் 27 ரன்கள் அடிக்க, சிக்ஸர்ஸ் அணி 12 ஓவரில் 116 ரன்களை விளாசியது. 

12 ஓவரில் 117 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரரும், இந்த தொடர் முழுவதும் அபாரமாக ஆடிய அந்த அணியின் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ் இந்த போட்டியில் ஏமாற்றினார். அவர் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மேடின்சன் டக் அவுட். மேக்ஸ்வெல் 5 ரன்னில் அவுட். பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், பென் டன்க் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

ஸ்டார்ஸ் அணியில் நிக் லார்கின் மட்டும் சிறப்பாக ஆடி 26 பந்தில் 38 ரன்கள் அடித்தார். அவர் கடைசி வரை களத்தில் நின்று போராடினார். ஆனால் அவரால் இலக்கை விரட்ட முடியவில்லை. ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகிய அணியின் நட்சத்திர வீரர்கள் சொதப்பியதால், 12 ஓவரில்  97 ரன்கள் மட்டுமே அடித்த ஸ்டார்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இதையடுத்து சிட்னி சிக்ஸர்ஸ் அணி இரண்டாவது முறையாக பிக்பேஷ் டைட்டிலை வென்றது. 2011-12ல் நடந்த பிக்பேஷ் லீக்கின் முதல் சீசனில் டைட்டிலை வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, தற்போது 9வது சீசனில் இரண்டாவது முறையாக வென்று அசத்தியது. 

கடந்த முறையும் இறுதி போட்டி வரை வந்து, இறுதி போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியிடம் தோற்று கோப்பையை இழந்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இம்முறையும் ஃபைனலில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியிடம் தோற்று கோப்பையை தவறவிட்டது. இத்துடன் மூன்று முறை ஃபைனலுக்கு வந்து மூன்று முறையும் தோற்றுள்ளது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி. 
 

click me!