
சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக செயல்படுபவர் நடிகர் சித்தார்த். சமூக பிரச்னைகள் குறித்து தனது வலுவான குரலை பதிவு செய்வதுடன், அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார் சித்தார்த்.
அந்தவகையில், சாய்னா நேவால் குறித்து தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டு, கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் சித்தார்த்.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தையடுத்து, தான் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.
பிரதமரின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமான போராட்டக்காரர்களின் செயல்பாட்டிற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் சாய்னா நேவால். இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பிரதமருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலை கொச்சைப்படுத்தும் விதமாக டுவீட் செய்திருந்தார்.
சித்தார்த்தின் கருத்துக்கு கண்டனம் வலுத்துவருகிறது. திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சாய்னா நேவாலுக்கு ஆதரவாகவும், சித்தார்த்துக்கு எதிராகவும் குரல் கொடுத்துவருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மகாராஷ்டிரா காவல்துறை டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சாய்னா நேவாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்த டுவிட்டர் பதிவில், நாட்டுக்காக இரத்தம் சிந்தி விளையாடும் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு எதிரான இதுபோன்ற கொச்சை வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு விளையாட்டு வீரனாக சாய்னா நேவாலுக்கு நான் ஆதரவளிக்கிறேன் என்று ரெய்னா டுவீட் செய்துள்ளார்.