IPL 2022: ஓஹோ அப்படியா விஷயம்.. இதுதான் அன்றைக்கு டிவில்லியர்ஸ் அப்படி பேச காரணமா..?

By karthikeyan VFirst Published Jan 10, 2022, 5:13 PM IST
Highlights

ஆர்சிபி அணி டிவில்லியர்ஸை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஏற்கனவே அணுகியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில்  14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் கூடுதலாக ஆடுவதாக இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும், ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான டிவில்லியர்ஸ் ஐபிஎல்லிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட வல்லவர் என்பதால் மிஸ்டர் 360 என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டிவில்லியர்ஸ், 2019 உலக கோப்பைக்கு தென்னாப்பிரிக்கா தீவிரமாக தயாராகிவந்த நிலையில், அதற்கு முன்பாக 2018ல் திடீரென ஓய்வு அறிவித்தார் டிவில்லியர்ஸ்.

2018ல் டிவில்லியர்ஸின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அதேபோலவே ஐபிஎல்லிலும் திடீரென ஓய்வு அறிவித்து அதிர்ச்சியளித்தார் டிவில்லியர்ஸ்.

ஐபிஎல்லில் 184 போட்டிகளில் ஆடி 5162 ரன்களை குவித்துள்ளார் டிவில்லியர்ஸ். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து 2010 வரை 3 சீசன்கள் டெல்லி அணியில் ஆடிய டிவில்லியர்ஸ், 2011லிருந்து 2021 வரை 11 சீசன்கள் ஆர்சிபி அணிக்காக ஆடிய அளப்பரிய பங்காற்றியிருக்கிறார். அவர் ஆடிய காலத்தில் அவரால் ஒரு கோப்பையை கூட ஜெயித்து கொடுக்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயமே.

ஐபிஎல்லின்  வெற்றிகரமான மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர்களில் ஒருவரான டிவில்லியர்ஸ், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தென்னாப்பிரிக்கா அணிக்காகவும், ஆர்சிபி அணிக்காகவு தான் செய்ய வேண்டிய பணி இன்னும் உள்ளது என்று டிவில்லியர்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவர் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பங்கார் தான் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர். ஆனால் டிவில்லியர்ஸ் ஆலோசகர் அல்லது பேட்டிங் பயிற்சியாளர் ஆகிய ஏதேனும் ஒரு பொறுப்பில் நியமிக்கப்படலாம். எப்படியோ, ஏதாவது ஒரு பொறுப்புடன் ஆர்சிபி டக் அவுட்டில் டிவில்லியர்ஸ் இருப்பார். டிவில்லியர்ஸை பயிற்சியாளர் பொறுப்பிற்கு ஆர்சிபி அணி ஏற்கனவே கண்டிப்பாக அணுகியிருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையவிருப்பதால் தான், டிவில்லியர்ஸ் முன்கூட்டியே அதுதொடர்பாக ஏற்கனவே க்ளூ கொடுத்திருக்கிறார் போலும்.
 

click me!