2011 உலக கோப்பை ஃபைனலில் யுவராஜுக்கு முன் தோனி களமிறங்கியது ஏன்..? ரெய்னா விளக்கம்

By karthikeyan VFirst Published Apr 4, 2020, 8:47 PM IST
Highlights

2011 உலக கோப்பை ஃபைனலில் கோலி அவுட்டான பின்னர், ஐந்தாம் வரிசையில் யுவராஜ் சிங் இறங்காமல் அவருக்கு முன்பாக தோனி களமிறங்கியது ஏன் என்று சுரேஷ் ரெய்னா விளக்கமளித்துள்ளார்.
 

1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ல் உலக கோப்பையை வென்று அசத்தியது. இறுதி போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியை அவ்வளவு எளிதாக கிரிக்கெட் ரசிகர்களால் மறந்துவிட முடியாது. 

மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவித்தது. பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் முக்கியமான இன்னிங்ஸை ஆடிய கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் 3வது விக்கெட்டாக கோலி அவுட்டான பிறகு நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ், பேட்டிங் ஆட செல்லாமல், தோனி சென்றார். தோனி சிறப்பாக ஆடி, இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, யுவராஜுக்கு முன்னால் தோனி ஏன் பேட்டிங் ஆட சென்றார் என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்தது. 

இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்திருந்த தோனி, முரளிதரனின் பவுலிங்கை தன்னால் சிறப்பாக எதிர்கொண்டு ஆடமுடியும் என்பதால், யுவராஜுக்கு முன் தான் பேட்டிங் ஆட விரும்பியதாகவும், அந்த விருப்பத்தை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனிடம் கூற, அவரும் ஒப்புதல் அளித்ததால், யுவராஜுக்கு முன் இறங்கியதாகவும் தோனி தெரிவித்தார்.

ஆனால் சேவாக்கோ, யுவராஜுக்கு முன் தோனியை இறக்கியது சச்சின் டெண்டுல்கரின் ஐடியா என்று தெரிவித்திருந்தார். கம்பீர் - கோலி ஆகிய இருவரில் இடது கை பேட்ஸ்மேன் கம்பீர் அவுட்டானால், யுவராஜ் சிங் களத்திற்கு செல்ல வேண்டும் எனவும் கோலி அவுட்டானால் தோனி செல்லலாம் எனவும் சச்சின் அறிவுறுத்தியதாகவும் அதன்படி, கோலி அவுட்டானதால், களத்தில் இருந்த இடது கை பேட்ஸ்மேன் கம்பீருடன் வலது கை பார்ட்னராக தோனி இறங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2011 உலக கோப்பை ஃபைனலில் யுவராஜுக்கு முன் தோனி இறங்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, சேவாக் ஆட்டமிழந்ததும் கம்பீர் களத்திற்கு சென்றார். கம்பீரின் உடல்மொழியே, அவர் இந்திய அணிக்காக கோப்பையை ஜெயித்து கொடுத்துவிடுவார் என்பதை உறுதி செய்தது. சச்சின் அவுட்டானதும் மொத்த டிரெஸ்ஸிங் ரூமும் நிசப்தமானது. பின்னர் கம்பீரும் கோலியும் சிறப்பாக ஆடினர். 

கோலி அவுட்டான பிறகு, யுவராஜ் சிங் தான் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் முரளிதரனின் பவுலிங்கை தன்னால் சிறப்பாக எதிர்கொண்டு ஆடமுடியும் என்பதால், கோலி அவுட்டானதும் தானே களமிறங்குவதாக கேரி கிறிஸ்டனிடம் சொல்லிவிட்டு தோனி இறங்கினார் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். இதையே தான் தோனியும் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!