இந்திய அணிக்கு திரும்பும் சுரேஷ் ரெய்னா..?

Published : Sep 27, 2019, 12:33 PM IST
இந்திய அணிக்கு திரும்பும் சுரேஷ் ரெய்னா..?

சுருக்கம்

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் இரண்டு டி20 உலக கோப்பை தொடர்களில் அணியில் இணைவது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம்வந்த சுரேஷ் ரெய்னா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். 

தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே அசத்திய ரெய்னா, பார்ட் டைம் பவுலராகவும் சில ஓவர்களை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர்களில் ஒருவராக ஜாண்டி ரோட்ஸே ரெய்னாவை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5,615 ரன்களையும், 78 டி20 போட்டிகளில் 1605 ரன்களையும் குவித்துள்ளார். உலக கோப்பைக்கு முன் நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலம் நடந்துகொண்டிருந்தபோது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரெய்னாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் பெரியளவில் சோபிக்காததால், மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். 

இந்நிலையில், இந்திய அணியின் நான்காம் வரிசை வீரராக தன்னால் ஜொலிக்க முடியும் என ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான அணியை உருவாக்குவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்திவருகிறது. 

இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தீர்வாக அமைந்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தவிர மிடில் ஆர்டரில் ஆட மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். எனினும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் இன்னும் வலுவடையவில்லை. ஒரு நிலையான தரமான வீரர் மிடில் ஆர்டருக்கு தேவை. 

இந்நிலையில், மீண்டும் அணியில் இணைய ஆர்வமாக உள்ள ரெய்னா, அதுகுறித்து பேசும்போது, இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு என்னால் தீர்வு கொடுக்க முடியும். நான் ஏற்கனவே அந்த வரிசையில் இறங்கி சிறப்பாக ஆடியிருக்கிறேன். எனவே என்னால் நான்காம் வரிசையில் ஜொலிக்க முடியும் என நம்புகிறேன். அடுத்து வரவுள்ள இரண்டு டி20 உலக கோப்பைகளிலும் இந்திய அணியில் எனக்கான இடத்திற்காக காத்திருக்கிறேன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து