IPL 2022: எதிரணிகளை அல்லு தெறிக்கவிடும் SRH அணியின் பலமான பயிற்சியாளர் குழு..! ஆலோசகராக பிரயன் லாரா நியமனம்

By karthikeyan VFirst Published Dec 23, 2021, 3:24 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் குழு மிகப்பெரும் ஜாம்பவான்களை உள்ளடக்கியுள்ளது. லெஜண்ட் கிரிக்கெட்டரும், ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவருமான பிரயன் லாரா ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால், 15வது சீசன் முதல் 10 அணிகள் ஆடவுள்ளன. இந்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் ஆடுவதால், இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. 

2022ம் ஆண்டு பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மெகா ஏலம் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இதற்கிடையே, மெகா ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும், தங்களுக்கு தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட வீரர்கள் மெகா ஏலத்தில் கலந்துகொள்வார்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதன் பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி, கேன் வில்லியம்சன் (ரூ.14 கோடி), உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி), அப்துல் சமாத் (ரூ.4 கோடி) ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்தது. டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்களை கழட்டிவிட்டது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளராக மீண்டும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார். 2013லிருந்து 2019 வரை சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் தான் இருந்தார். அவரது பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் அணி 2016 சீசனில் கோப்பையை வென்றது. 2020 மற்றும் 2021 ஆகிய 2 சீசன்களில் டாம் மூடி நீக்கப்பட்டு டிரெவெர் பேலிஸ் தலைமை  பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது காலத்தில் சன்ரைசர்ஸ் அணி படுமோசமாக ஆடியது. இந்நிலையில், டாம் மூடி மீண்டும் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக, சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் மிரட்டல் வேகப்பந்துவீச்சாளருமான டேல் ஸ்டெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். 

உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் சைமன் கேடிச்சும், ஃபீல்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான ஹேமங் பதானியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக லெஜண்ட் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் தொடர்கிறார். இவர்களையெல்லாம் விட மிகப்பெரிய பலமாக சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் கிரிக்கெட்டரும், ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பிரயன் லாரா. இதுவரை ஐபிஎல்லில் எந்த அணியிலும் அங்கம் வகிக்காத பிரயன் லாராவை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ள சன்ரைசர்ஸ் அணி, அவரை ஆலோசகராகவும் நியமித்துள்ளது.

லாரா, முரளிதரன், ஸ்டெய்ன், டாம் மூடி என மிகப்பெரும் ஜாம்பவான்களை உள்ளடக்கிய, எதிரணிகளை அச்சுறுத்தும் வலிமை வாய்ந்த பயிற்சியாளர் குழுவாக உள்ளது சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு.
 

click me!