
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகளும் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்த 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதி. எஞ்சிய 2 இடங்களுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்றுவருகிறது. இந்நிலையில், அந்த அணியின் முக்கியமான வீரரான ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் காயமடைந்துள்ளார். ஐபிஎல் தொடர் முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், அணிகளின் முக்கியமான வீரர்களின் ஃபிட்னெஸ் மிக முக்கியம்.
இந்த சீசனில் ஏற்கனவே காயம் காரணமாக 3 போட்டிகளில் ஆடவில்லை. அதன்பின்னர் காயத்திலிருந்து மீண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தர், 2 போட்டிகளில் ஆடிய நிலையில், மீண்டும் வலது கையில் காயமடைந்துள்ளார். எனவே அடுத்த போட்டியில் அவர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இந்த தகவலை சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டாம் மூடி உறுதிபடுத்தியுள்ளார்.