
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல் என்றாலே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கமும் எண்டர்டெய்ன்மெண்ட்டும் தான் அதிகமாக இருக்கும். கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, பிராவோ, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் ஐபிஎல்லின் சிறந்த வீரர்களாகவும் மேட்ச் வின்னர்களாகவும் திகழும் நிலையில், அவர்கள் வரிசையில் இப்போது ரோவ்மன் பவல் இணைந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோவ்மன் பவல் டெல்லி கேபிடள்ஸுக்காக அபாரமாக பேட்டிங் ஆடி போட்டிகளை முடித்து கொடுத்துவருகிறார். டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஃபினிஷிங் ரோலை அருமையாக செய்துவருகிறார்.
ரோவ்மன் பவலை பற்றி வர்ணனையின்போது பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப், அவரது ஏழ்மை குறித்தும், அவரது தாய்க்கு அவர் செய்து கொடுத்த சத்தியம் குறித்தும் பேசினார். அது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
2016ம் ஆண்டே வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமான ரோவ்மன் பவல் சரியான ஃபார்மில் இல்லாததால் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் இருந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிரந்தர இடத்தை பிடித்து அருமையாக ஆடிவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்காக 37 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் பவல்.
2017ம் ஆண்டு ஐபிஎல்லில் கேகேஆர் அணியால் எடுக்கப்பட்ட ரோவ்மன் பவல், அதன்பின்னர் ஐபிஎல்லில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ரோவ்மன் பவலை எடுத்தது. டெல்லி அணியின் ஆடும் லெவனில் நிரந்தர இடம்பிடித்த ரோவ்மன் பவல் அந்த அணிக்காக போட்டிகளை முடித்து கொடுத்துவருகிறார்.
இந்நிலையில் பவல் குறித்து வர்ணனையின்போது பேசிய வர்ணனையாளர் இயன் பிஷப், ரோவ்மன் பவல் சிறுவயதில் ஏழ்மையில் வாடியவர். அப்போது, அவரது குடும்பத்தை ஏழ்மையிலிருந்து மீட்பேன் என்று அவரது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த பாதை கிரிக்கெட். இப்போது ஐபிஎல் மூலம் அவர் தாய்க்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றிவருகிறார் என்றார் இயன் பிஷப்.
டெல்லி அணியால் ரூ.2 கோடியே 80 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டபோதே ரோவ்மன் பவல் வறுமையில் இருந்து மீண்டுவிட்டார். அவர் நன்றாக ஆடுவதால் ஐபிஎல்லில் அவருக்கான கிராக்கி அதிகரிக்கும் என்பதால் இன்னும் அதிகமான தொகைக்கு எல்லாம் அவர் ஏலம் போவார் என்பதால் அவரது வறுமை நீங்கிவிட்டது. தாய்க்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டார் ரோவ்மன் பவல்.