
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். சச்சின் டெண்டுல்கருக்கு முன் பல பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்ட லெஜண்ட் பேட்ஸ்மேன் கவாஸ்கர். திறமையான வீரர்களை எப்போதுமே அங்கீகரித்து பாராட்டக்கூடியவர் கவாஸ்கர்.
அந்தவகையில், சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு, தான் பார்த்து வியந்த இந்திய வீரர் உம்ரான் மாலிக் தான் என்று கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல்லில் அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்தவர் உம்ரான் மாலிக். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி வீரர்களை அலறவிட்டார். தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார். ஐபிஎல் 15வது சீசனில் உம்ரான் மாலிக் 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சீசனின் 2வது அதிவேக பந்து. இறுதிப்போட்டியில் 157.3 கிமீ வேகத்தில் வீசி உம்ரான் மாலிக்கை பின்னுக்குத்தள்ளினார் லாக்கி ஃபெர்குசன்.
ஐபிஎல்லில் அதிவேகத்தில் பந்துவீசி அனைவரையும் கவர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார் உம்ரான் மாலிக். வலைப்பயிற்சியில் கூட, 163.7 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசி சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அக்தர் வீசிய அதிவேக பந்தை (161.3) விட வேகமான பந்து இது. ஆனால் போட்டிக்களத்தில் வீசாமல் பயிற்சியில் வீசியதால் சர்வதேச கிரிக்கெட் சாதனையில் இடம்பெறமுடியாமல் போனது.
உம்ரான் மாலிக்கை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே ஆடும் லெவனில் எடுத்திருக்க வேண்டும் என்பது பல முன்னாள் வீரர்களின் கருத்து. முதல் போட்டியில் இடம் கிடைக்காததால், ஒரே போட்டியில் அணியில் மாற்றம் செய்யமுடியாது என்ற காரணத்தால் 2வது போட்டியிலும் அவர் ஆடவில்லை.
முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், 3வது டி20 போட்டியில் உம்ரான் மாலிக்கை ஆடவைக்க வேண்டும் என்பதே அனைவரது கருத்து. அந்தவகையில் அதைத்தான் கவாஸ்கரும் கூறியுள்ளார். அதுகுறித்து பேசும்போதுதான், சச்சினுக்கு பின் தான் பார்த்து வியந்த வீரர் உம்ரான் மாலிக் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், கடைசியாக நான் பார்த்து வியந்த வீரர் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு பிறகு இப்போது உம்ரான் மாலிக்கை பார்த்து பெரும் வியப்படைந்தேன். அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடுவார் என நம்புகிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக ஜெயித்தே தீரவேண்டும். அதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி பரிசோதனை செய்யும் என நினைக்கிறேன். டி20 உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்யவேண்டும். எனவே அதற்கு முன் அர்ஷ்தீப் மற்றும் உம்ரானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்திய அணிக்கு விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் தேவை. உம்ரான் மாலிக் விக்கெட் வீழ்த்தக்கூடிய பவுலர் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.