பேட்ஸ்மேன்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. அந்த விஷயத்தை கள நடுவர் தான் முடிவு செய்யணும்..! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 4, 2021, 2:56 PM IST
Highlights

நோ பாலா இல்லையா என்பதை களநடுவர் தான் முடிவு செய்ய வேண்டும்; 3வது நடுவர் அல்ல என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவருமான சுனில் கவாஸ்கர், தற்போது கிரிக்கெட்டி வர்ணனை செய்துவருகிறார். தனக்கு சரி என்று தோன்றிய கருத்தை எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக கூறக்கூடியவர். அது யாரைப்பற்றிய கருத்தாக, எந்தவிதமான கருத்தாக இருந்தாலும் சரி, வெளிப்படையாக கூறுபவர்.

வீரர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது, ஐசிசி விதிகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்து கருத்து துணிச்சலுடன் கருத்து கூறக்கூடியவர் கவாஸ்கர். அந்தவகையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பேட்டிங்கில் சொதப்பிவரும் கோலி, சச்சின் டெண்டுல்கருக்கு ஃபோன் செய்து ஆலோசனை கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் கேப்டன் கோலி தவறான ரிவியூ எடுத்தபோது, விக்கெட் கீப்பரின் ஆலோசனையை கேட்டுத்தான் கேப்டன் ரிவியூ எடுக்க வேண்டுமே தவிர, அவராக எடுக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது, பவுலர் வீசும் க்ரீஸ் நோ பால் குறித்த விஷயத்தில் கள நடுவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அதை 3வது நடுவர் கூறக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். முன்பெல்லாம், பவுலர் வீசும் க்ரீஸ் நோ பாலை கவனித்து முடிவெடுக்க வேண்டியது கள நடுவரின் பணிதான். ஆனால் கள நடுவர்கள் சில நேரங்களில் சரியாக கவனிக்க முடியாமல் நோ பால் விஷயத்தில் தவறு செய்கின்றனர். அது போட்டியின் முடிவையே மாற்றக்கூடியதாக அமைந்துவிடுகிறது.

எனவே, கள நடுவர்களுக்கு இருக்கும் பல பணிகளில் க்ரீஸ் நோ பாலை கவனிப்பது என்பது கண்டிப்பாக மிகச்சவாலான விஷயம் தான். அதனால் சில தவறுகள் நடப்பதை பெரிய குற்றமாக கருதமுடியாது. ஆனாலும், அந்த தவறுகளை களையும் விதமாக, நோ பாலா இல்லையா என்பதை கள நடுவர் கண்டுகொள்ள தேவையில்லை; 3வது நடுவரே நேரடியாக கவனித்து அறிவிப்பார் என்று ஐசிசி விதியை மாற்றியமைத்தது. அதுதான் இப்போது நடைமுறையில் உள்ளது.

ஆனால் அதை மாற்றி, நோ பால் விஷயத்தில் கள நடுவரே முடிவெடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், நோ பால் விஷயத்தில் கள நடுவர் முடிவெடுத்து அறிவிப்பதுதான் சரி. 3வது அம்பயர் முடிவெடுப்பது பேட்ஸ்மேன்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஏனெனில் கள நடுவர் உடனடியாக நோ பால் அறிவித்தால், பேட்ஸ்மேன்கள் உடனடியாக அவர்களது ஷாட்டை மாற்றும் வாய்ப்பு கிடைக்கும். 3வது அம்பயர் அறிவிக்கும்போது, அந்தவொரு வாய்ப்பு பறிபோகிறது. கள நடுவர் நோ பால் விஷயத்தில் துணிச்சலாக முடிவெடுக்கலாம். தவறு இருந்தால் டிவி அம்பயர் சரி செய்யலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!