இங்கிலாந்துலாம் ஒரு டீமா? நான்தான் ஆரம்பத்துலயே இந்த தொடரின் முடிவை சொல்லிட்டனே அதான் நடக்கும்!கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 17, 2021, 5:52 PM IST
Highlights

இங்கிலாந்து அணி ஒரு முறையான டெஸ்ட் அணியாக இல்லை என்றும் எஞ்சிய போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 அல்லது 3-1 என இந்த தொடரை கைப்பற்றும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இங்கிலாந்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிவருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.

மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், அந்த போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில், இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 157 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.

முதல் டெஸ்ட்டில் தவறவிட்ட வெற்றியை 2வது டெஸ்ட்டில் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆடிய இந்திய அணி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர், இங்கிலாந்து ரூட் மற்றும் ஆண்டர்சன் ஆகிய 2 வீரர்களை மட்டுமே கொண்ட அணி. அந்த அணி ஒரு முழுமையான முறையான டெஸ்ட் அணியாக தெரியவில்லை.

அவர்களின் டெக்னிக் படுமோசமாக உள்ளது. தொடக்க வீரர்களின் டெக்னிக் படுமோசம். 3ம் வரிசையில் ஆடிய ஹசீப் ஹமீத் பதற்றமாகவே இருக்கிறார். ரூட் ஒருவர் தான் உருப்படியான வீரர். பேர்ஸ்டோ அடித்தால் உண்டு; அடிக்கவில்லை என்றால் இல்லை. பட்லர் சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர். ஆனால் டெஸ்ட்டை பற்றி தெரியவில்லை.

பவுலிங்கில் ஜிம்மி ஆண்டர்சன் மட்டும்தான். ராபின்சன் முதல் டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தினார். ரூட், ஆண்டர்சனுடன் இவரையும் சேர்த்தால் இரண்டரை பேரை கொண்ட அணியாக இங்கிலாந்து உள்ளது. இந்திய அணி அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். நான் இந்த தொடர் தொடங்குவதற்கு முன், ஆரம்பத்திலேயே கூறியபடி, இந்திய அணி இந்த தொடரை 4-0 அல்லது 3-1 என கைப்பற்றும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!