2003ல நான் பண்ண அதே தவறை கோலி பண்ணிடக்கூடாது!! கங்குலி சொல்றதுல ஆழமான ஒரு காரணம் இருக்கு

Published : Mar 18, 2019, 05:09 PM IST
2003ல நான் பண்ண அதே தவறை கோலி பண்ணிடக்கூடாது!! கங்குலி சொல்றதுல ஆழமான ஒரு காரணம் இருக்கு

சுருக்கம்

கங்குலி காரணம் இல்லாமல் சொல்லவில்லை. அதனால் 2003ல் நடந்த தவறு, மீண்டும் நடக்கக்கூடாது என்று கருதினால் கேப்டன் கோலி, கங்குலியின் கருத்தை பரிசீலிக்கலாம்.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை அடுத்து 4ம் வரிசை பிரச்னை தீர்ந்ததாக இந்திய அணி நிர்வாகம் நினைத்தது.

 

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் சேர்த்தே மொத்தமாக 33 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், அந்த இடத்திற்கு அணி நிர்வாகம் வேறு வீரரை தேடுவதை உறுதிப்படுத்தியது. 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலம் இன்னும் நடந்துவருகிறது. பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது பரிந்துரைகளை அளித்து வருகின்றனர். முன்னாள் கேப்டன் கங்குலியும் தனது கருத்தை தெரிவித்தார். 

4ம் வரிசையில் புஜாராவை இறக்கலாம் என கங்குலி ஆலோசனை தெரிவித்திருந்தார். இதுகுறித்து இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் புஜாராவை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, நான்காம் வரிசைக்கு நான் பரிந்துரைக்கும் வீரரை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வது சந்தேகம் தான். நான் அந்த பெயரை சொன்னதும் பலருக்கு சிரிப்பு கூட வரலாம். ஆனால் என்னை பொறுத்தவரை உலக கோப்பையில் 4ம் வரிசையில் புஜாராவை இறக்கலாம். அவரது ஃபீல்டிங் ஒரு மைனஸ்தான். ஆனால் அவர் சிறந்த பேட்ஸ்மேன். நிறைய பேருக்கு என்னுடைய பரிந்துரை அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் 4ம் வரிசையில் தரமான பேட்ஸ்மேன் வேண்டுமென்றால், இதுவரை இந்திய அணி பரிசோதித்த வீரர்களை காட்டிலும் புஜாரா அந்த வரிசைக்கு சிறந்தவராக இருப்பார். இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் செய்த பணியை புஜாராவால் செய்ய முடியும். ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட தேர்வுதான். நிறைய பேர் என்னுடைய இந்த கருத்துடன் முரண்படுவார்கள் என்று எனக்கு தெரியும். இந்திய அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து தள்ளும் நிலையில், நான்காம் வரிசை வீரராக புஜாராவை களமிறக்கலாம். அவர் அந்த வரிசைக்கும் அணிக்கும் வலு சேர்ப்பார் என்று கங்குலி தெரிவித்திருந்தார். 

புஜாராவின் பெயரை கங்குலி பரிந்துரைத்ததற்கு ஆழமான காரணம் ஒன்று உள்ளது. 2003 உலக கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணி, இறுதி போட்டி வரை முன்னேறி, இறுதி போட்டியில் பாண்டிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. அந்த உலக கோப்பைக்கு கங்குலி லட்சுமணனை அழைத்து செல்லவில்லை. 

லட்சுமணனை டெஸ்ட் வீரராக மட்டுமே கருதி, 2003 உலக கோப்பைக்கு அவர் அழைத்து செல்லப்படவில்லை. ஆனால் அவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடக்கூடியவர். குறிப்பாக அந்த உலக கோப்பையில் இந்திய அணி தோற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி நல்ல நம்பரை பெற்றிருந்தவர். லட்சுமணனை 2003 உலக கோப்பைக்கு அழைத்து செல்லாதது பெரிய தவறு என்றும் ஒருவேளை அவரை அழைத்து சென்றிருந்தால், கோப்பையை வென்றிருக்கலாம் என்றும் அண்மையில் கங்குலி கூறியிருந்தார். 

எனவே 2003ல் லட்சுமணனை அழைத்து செல்லாதது போல இந்த உலக கோப்பைக்கு புஜாராவை டெஸ்ட் வீரராக கருதி புறக்கணித்துவிடக்கூடாது என்பதற்காகக்கூட முன்னெச்சரிக்கையாக, தனது கருத்தை கங்குலி கூறியிருக்கிறார். மேலும் அன்று நடந்த தவறு மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது பரிந்துரையை கேட்டு பலரும் சிரிக்க நேரிடும் என்பதை அறிந்தும்கூட, வெளிப்படையாக கங்குலி தனது பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!
Abhishek Sharma: டெல்லிக்கு தண்ணி காட்டிய அபிஷேக் சர்மா.. 10 சிக்ஸர்களுடன் செஞ்சுரி..!