இவங்க 2 பேரும் இதனால்தான் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்காங்க.. வியக்கவைக்கும் ஸ்கோர்கார்டு.. அரிதினும் அரிதான சம்பவம்

By karthikeyan VFirst Published Dec 26, 2019, 4:59 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் கோலியும் ஸ்மித்தும் தான் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகின்றனர். 
 

விராட் கோலி மூன்றுவிதமான போட்டிகளிலும் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்கிறார். விராட் கோலிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ஸ்மித். அந்தளவிற்கு சமகால கிரிக்கெட்டில் கோலோச்சுகிறார் ஸ்மித். 

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்மித், ஏற்கனவே சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனாலும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து திரும்பிய பிறகு, அவரது பேட்டிங் வேற லெவலில் உள்ளது. ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 775 ரன்களை குவித்தார். ஸ்மித் மாதிரியான வீரரின் இடத்தை நிரப்புவது மிக மிக கடினம். திடீரென ஸ்மித் இல்லையென்றால், அவரது இடத்தை வேறு ஒரு வீரரை கொண்டு நிரப்புவது மிக கடினமான காரியம். மிகச்சிறந்த வீரரின் இடத்தை நிரப்ப முடியாமல், அப்படியே நொடிந்துபோன அணிகள் ஏராளமாக உள்ளன. தற்போதைய தென்னாப்பிரிக்க அணியே அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான். 

டிவில்லியர்ஸின் இடத்தை நிரப்ப முடியாமல் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து, படுமோசமான நிலையில் உள்ளது. அதேநேரத்தில் ஒரே அணியில் தலைசிறந்த வீரர்கள் பலர் இருப்பதையும் பார்த்திருக்கிறோம். இந்திய டெஸ்ட் அணியில் கோலி - புஜாரா, ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா - கோலி என இரண்டிரண்டு சிறந்த வீரர்களும் இருக்கின்றனர். 

சச்சின் டெண்டுல்கர் போனதற்கு பிறகு, அவரது இடத்தை நிரப்பும் ரன் மெஷினாக கோலி இருக்கிறார். அதிரடியான பேட்டிங்கின் மூலம் அசாத்தியமான பெரிய இன்னிங்ஸை ஆடும் சேவாக்கை போல ரோஹித் இருக்கிறார். டிராவிட் - லட்சுமணனை போல புஜாரா இருக்கிறார். 

அந்த வகையில், தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், சமகாலத்தின் தலைசிறந்த வீரராக இருக்கும் நிலையில், அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டாலும் அவரது இடத்தை நிரப்பும் வீரராக உருவெடுத்துள்ளார் மார்ன்ஸ் லபுஷேன். ஆஷஸ் தொடரில் ஸ்மித்துக்கு தலையில் அடிபட்டு, அவர் ஆடமுடியாமல் போன நிலையில், அவருக்கு மாற்று வீரராக, அந்த குறிப்பிட்ட போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும், அதற்கடுத்த போட்டியிலும் அவரது இடத்தில் இறங்கி, ஸ்மித் இல்லாத குறையே தெரியாத அளவிற்கு அருமையாக ஆடி, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தார் லபுஷேன். 

அந்த தொடருக்கு பின்னர், ஸ்மித் நான்காம் வரிசையிலும் லபுஷேன் மூன்றாம் வரிசையிலும் இறக்கப்படுகின்றனர். இந்திய அணியில் புஜாராவும் கோலியும் ஆடுவதை போல, ஆஸ்திரேலிய அணிக்கு, மூன்று மற்றும் நான்காம் பேட்டிங் ஆர்டர்களில் வலு சேர்க்கின்றனர் லபுஷேனும் ஸ்மித்தும். லபுஷேனை இன்னொரு ஸ்மித் என்றே சொல்லலாம். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஆட தொடங்கினால், அந்த பார்ட்னர்ஷிப்பை பிரிப்பது மிக மிக கடினம். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதை போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. டெஸ்ட் போட்டிகளை மிகவும் திறமையாகவும் நிதானமாகவும் அணுக வேண்டும். அதற்கு ஆட்டத்திறனுடன் மனவலிமையும் பொறுமையும் கவனக்குவிப்பும் வேண்டும். இவையனைத்தையும் ஒருசேர பெற்றிருப்பதால்தான், ஸ்மித் போன்ற வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர். ஸ்மித் ஆடும் காலக்கட்டத்திலேயே அவருக்கு நிகரான திறமைசாலி கிடைத்தது ஆஸ்திரேலிய அணியின் பாக்கியம். 

லபுஷேன் ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய லபுஷேன், 3 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்த ஆண்டு நடந்த ஆஷஸில் ஸ்மித்துக்கு பதிலாக கம்பேக் கொடுத்ததற்கு பின்னர் அடிக்கப்பட்டவை. 

ஸ்மித்துக்கு நிகரான சிறந்த பேட்ஸ்மேனாக லபுஷேன் திகழ்வது எப்படி என்ற கேள்விக்கு, நியூசிலாந்துக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அவர்கள் இருவரும் ஆடிய விதம் தான் விளக்கம். வழக்கம்போலவே நன்றாக ஆடி அரைசதம் அடித்த லபுஷேன், 149 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 63 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். 

மூன்றாவது விக்கெட்டுக்கு இவரும் ஸ்மித்தும் சேர்ந்து 83 ரன்களை சேர்த்தனர். லபுஷேன் ஆட்டமிழந்த பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்மித், தனது அரைசதத்தை அடித்தார். முதல் நாள் முடிவில் ஸ்மித் 77 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். ஸ்மித் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, வியப்பளிக்கும் விதமாக அமைந்தது ஸ்கோர் கார்டு. 

லபுஷேன் 149 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்திருந்தார் அல்லவா... ஸ்மித்தும் ஒரு கட்டத்தில், மிகச்சரியாக அதே 149 பந்தில் அதே 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அதே 63 ரன்களை அடித்திருந்தார். இந்த ஸ்கோர் கார்டு அவர்கள் இருவரின் அணுகுமுறையும் ஒரே மாதிரி இருப்பதை காட்டுகிறது. 
 

click me!