பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட்டும் திடீரென சந்தித்து பேசுவது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவராக இருக்கிறார். கங்குலி கேப்டனாக இருந்தபோது, அணியின் துணை கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், தற்போது பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்துவருகிறார்.
இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த பங்காற்றியுள்ள இருபெரும் ஜாம்பவான்களும் தற்போது, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மிக முக்கிய பொறுப்புகளில் இருப்பதால், இவர்களின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணிக்கு தேர்வாகும் வீரர்களோ அல்லது காயத்தால் வெளியேறி உடற்தகுதி பெற்று திரும்பும் வீரர்களோ, என்சிஏ-வில்(தேசிய கிரிக்கெட் அகாடமி) பயிற்சி பெற்று உடற்தகுதி சான்று பெற்றால்தான் இந்திய அணியில் ஆடமுடியும். அதுதான் வழிமுறை.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் காயத்தால் இந்திய அணியிலிருந்து வெளியேறிய பும்ரா, என்சிஏ மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் என்சிஏ-வில் பயிற்சி எடுக்காமல், தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெற்று பயிற்சி எடுத்துவிட்டு, என்சிஏ-விடம் வந்து உடற்தகுதி டெஸ்ட் நடத்தி சான்று வழங்குமாறு கோரினார். ஆனால் என்சிஏ நிர்வாகிகள், அவரை என்சிஏ-வில் பயிற்சி பெறுமாறு அறிவுறுத்தியதை அவர் மதிக்காமல், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியுடன் இணைந்து, விசாகப்பட்டினத்தில் வலைப்பயிற்சியிலும் பந்துவீசினார்.
இதனால் அதிருப்தியடைந்த என்சிஏ, பும்ராவிற்கு உடற்தகுதி டெஸ்ட் நடத்தி, அவருக்கு சான்று வழங்க மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் என்சிஏவிற்கும் அதன் தலைவர் ராகுல் டிராவிட்டுக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி. எப்பேர்ப்பட்ட வீரராக இருந்தாலும், காயத்தால் வெளியேறினாலோ, அணியில் புதிதாக இணைந்தாலோ, என்சிஏவில் உடற்தகுதி சான்று பெற்றால்தான் அணியில் இணைய முடியும். அதுதான் வழிமுறை. ராகுல் டிராவிட் மிகுந்த அர்ப்பணிப்பு கொண்டவர். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. அவரது தலைமையில் என்சிஏ சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால், என்சிஏவில் உடற்தகுதி சான்று பெறாதபோதிலும், இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியற்றிற்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றார். அணியில் எடுத்துவிட்டு, அதன்பின்னர், பும்ராவை ரஞ்சி போட்டியில் ஆடி உடற்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தியது தேர்வுக்குழு. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், நியூசிலாந்து செல்வதற்கு முன்னதாக பும்ரா ரஞ்சி போட்டியில் ஆடினால் போதும். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 4 ஓவர்கள் வீசுவதால் ஒன்றும் பிரச்னையில்லை. எனவே இப்போதைக்கு ரஞ்சி போட்டியில் அவர் ஆட வேண்டாம் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்த பின்னணியில், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று திடீரென பிசிசிஐ தலைவர் கங்குலியும் என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட்டும் சந்தித்து பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்சிஏ சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், பும்ரா விவகாரம் குறித்தும், என்சிஏவை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்ப்பக்கப்படுகிறது.