IND vs NZ 2வது டெஸ்ட்டில் இன்னொரு வீரரை அறிமுகப்படுத்துங்க! இந்திய அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்த ஹார்மிசன்

By karthikeyan VFirst Published Dec 2, 2021, 10:01 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி நாளை(டிசம்பர் 3) மும்பை வான்கடேவில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி தொடரை வெல்லும். மேலும், இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்கும்.

முதல் டெஸ்ட்டில் விராட் கோலி ஆடாததால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடி, முதல் இன்னிங்ஸில் சதமும் 2வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அபாரமாக ஆடி அணியை காப்பாற்றினார்.

இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவதால், யார் நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. கோலி இணைவதால், ஷ்ரேயாஸ் ஐயரை அவ்வளவு எளிதாக நீக்கமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அறிமுக டெஸ்ட்டிலேயே அபாரமாக ஆடி, தன்னை புறக்கணிக்கமுடியாதபடி செய்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர்.

எனவே அவரை 2வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் புறக்கணிக்கமுடியாது. ஆனால் அதேவேளையில், புஜாரா - ரஹானே ஆகிய சீனியர் வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். எனவே அவர்கள் இருவரில் ஒருவரை நீக்கலாம் என்ற கருத்துகள் வலுக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன், இந்திய அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீவ் ஹார்மிசன், ஷ்ரேயாஸ் ஐயரை அணியிலிருந்து நீக்கமுடியாது. அவர் கண்டிப்பாக ஆடவேண்டும். விராட் கோலி அணிக்குள் வருகிறார். அவர் வந்தாலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவேண்டும். ரஹானே - புஜாரா ஆகிய இருவரும் தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். புஜாரா 39 இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இது மிக நீண்டகாலம். எனவே புஜாரா - ரஹானே ஆகிய இருவரையும் நீக்கிவிட்டு, சூர்யகுமார் யாதவுக்கு முதல் டெஸ்ட்டில் ஆட வாய்ப்பளிக்கலாம். அதேபோல, இஷாந்த் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜை ஆடவைக்கலாம் என்று ஹார்மிசன் தெரிவித்துள்ளார்.

2வது டெஸ்ட்டில் புஜாரா, ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய மூவரையும் நீக்கிவிட்டு, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் களமிறங்கலாம் என்று 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ஹார்மிசன்.

click me!